டெக்

தமிழக விஞ்ஞானி சந்திரசேகருக்கு டூடுல் வெளியிட்டு கெளரவித்த கூகுள்

தமிழக விஞ்ஞானி சந்திரசேகருக்கு டூடுல் வெளியிட்டு கெளரவித்த கூகுள்

webteam

ஆயுள் முடிந்த நட்சத்திரங்கள் கருங்குழிகளாக மாறுகி‌ன்றன என்பதை கண்டறிந்த தமிழக விஞ்ஞானி சந்திரசேகரின் 107-வது‌ பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு அவருக்கு கெளரவம் அளித்துள்ளது.

அண்டவெளியில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் அதன் அணுசக்தியை இழக்கும்போது இறந்த நட்சத்திரங்களாகி விடுகின்றன. அப்படி இறந்த நட்சத்திரங்களே கருங்குழிகளாக மாறியுள்ளன என்ற வாதத்திற்கு முதன்முதலாக வித்திட்டு நோபல் பரிசு வென்றவர் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர். இவர்தான், கருங்குழி என்ற ஒன்று ‌உள்ளது, அது ஒளியைக்கூட வெளியிடாது என கணக்கிட்டு கூறியவர்.

அவருடைய அந்தக் கணக்கு, அறிவியல் உலகில் சந்திரசேகர் லிமிட் என அழைக்கப்படுகின்றது. சந்திரசேகரின் கணக்குபடி, கருங்குழிகள் ஒளி உட்பட எந்த வகை பொருட்களுமே வெளியேற முடியாத அளவிற்கு வலுவான ஈர்ப்பு சக்தியுடைய எல்லைப் பகுதிகளை கொண்டவை. ஆங்கிலத்தில் ப்ளாக் ஹோல் என அழைக்கப்படும் இவற்றில் இருந்து மின்காந்த அலைகள் கூட வெளியேற முடியாது என்பதால், கருங்குழிகளுக்குள் என்ன நடக்கிறது என்பது இன்றளவும் ஆராய்ச்சிக்குரிய ஒன்றாகவே அமைந்துள்ளது.