கர்ணனுக்கு உடம்போடு ஒட்டிய கவசங்கள் போல, நவீனகால இளைஞர்களின் ஆறாவது விரலாக ஸ்மார்ட் போன்களானது கையோடு ஒட்டியே இருந்து வருகின்றன. செல்போனானது கையிலோ அல்லது பாக்கெட்டிலோ, ஹேண்ட் பேக்கிலோ இல்லையென்றால், ஏதோ நம் உடம்பில் ஒரு பாகம் இல்லாதது போலான உணர்வு பெரும்பாலானோருக்கு வருவது இயல்பாகவே இன்றைய காலத்தில் மாறிவிட்டது.
அதற்கு காரணமாக டீ கடை பில், பெரிய ஷாப்பிங் பில், பேங்க் டிரான்ஃபர் தொடங்கி மீட்டிங், டேட்டிங் என எல்லாமே ஸ்மார்ட்போனுக்குள் அடங்கி பல காலங்கள் ஆகிவிட்டன. முன்பு தொலைத்தொடர்புக்காக மட்டுமே இருந்த கைப்பேசிகளானது, பிறகு நெட்வொர்க், வலைதளம் என முன்னேற்றம் கண்டு, தற்போது 5ஜி நெட்வொர்க், AI தொழில்நுட்பம் என அசுர வளர்ச்சி கண்டுள்ளது.
அடுத்த தலைமுறையினரிடம் AI இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லையென்ற இடத்திற்கு நகர்ந்துள்ள நிலையில், அதற்கான விலைகளும் அடுத்தாண்டில் அதிகரிக்கும் என ஒரு அறிக்கை கூறுகிறது.
தற்போது நவீனகாலத்தின் அடுத்த நகர்வாக செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம் பிரதான பங்கை எடுத்துவருகிறது. AIஆனது முதலில் கம்பியூட்டரில் தொடங்கி தற்போது மொபைலுக்குள் நுழைந்து, அதை மையப்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பு என அடுத்த தலைமுறையினரிடம் ஒரு தொழில்நுட்ப புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் 5ஜி, ஏஐ தொழில்நுட்பங்கள் பெரிய பங்காற்றும் நிலையில், அந்த ஃபியூச்சர்களை கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களை உற்பத்தி செய்யவே அனைத்து நிறுவனங்களும் முன்னோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. அப்படி மொபைல்போன்களில் புதிய ஃபியூச்சர்கள் இடம்பெறும் பட்சத்தில் அடுத்தாண்டுகளில் ஸ்மார்ட்ஃபோன்களின் விலைகள் அதிகரிக்கும் என கவுண்டர்பாயின்ட் ஆராய்ச்சி அறிக்கை ஒன்று கூறுகிறது.
அந்த அறிக்கையின் படி, “நவீன உதிரிப் பாகங்கள், 5ஜி தொழில்நுட்பம், AI போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களின் வளர்ச்சியின் காரணமாக 2025-ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் விலைகள் 5% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 2024-ம் ஆண்டு ஸ்மார்ட் போன்களின் விலை 3% இருந்த நிலையில், 2025-ம் ஆண்டு 5%-ஆக விலை உயர்வு இருக்கும்” என தெரிவித்துள்ளது.
* புதிய தலைமுறையினர் ஸ்மார்ட்போன்களில் மேம்பட்ட வசதிகளையும், பியூச்சர்களையும் எதிர்ப்பார்க்கின்றனர். அதன்படி விலை உயர்வில் AI தொழில்நுட்பம் பெரிய காரணமாக அமையவிருக்கிறது. AI வசதிகளை ஸ்மார்ட்போன்களில் ஒருங்கிணைக்க அதிக செலவுகள் ஆகும் என்பதால் விலை உயர்வு பிரதானமாகிறது.
* AI செயல்பட வலிமையான பிராசசர்கள் தேவைப்படுகிறது. இதனால் வலிமையான CPU, NPU மற்றும் GPU கொண்ட சிப்களின் மேம்பட்ட திறன் தேவைப்படுகிறது. சந்தையிலும் இதற்கான தேவையும், போட்டியும் அதிகம் இருக்கிறது. இந்த அதிநவீன பிராசசர்களை இணைப்பதற்கு அதிக செலவாகும் என்பதால் ஸ்மார்ட்போன்களின் விலையும் அதிகரிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
* Al உடன், ஸ்மார்ட்போன் பிராண்டுகள் 4nm, 3nm போன்ற மேம்பட்ட பிராசசர்களின் செயல்முறைகளை கொண்டுள்ளன. இதுபோன்ற சிறிய மற்றும் அதேநேரம் வலிமையான பிராசசர்களே ஏஐ செயலிகளைத் தாக்குப்பிடிக்கவும், அதேநேரம் பேட்டரியையும் குறைந்தளவு பயன்படுத்தும் விதமாக பயன்படுத்தப்படுகிறது. இதன் உற்பத்தி சந்தையில் அதிக டிமாண்ட்டையும், செலவுகளையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
* 5ஜி நெட்வொர்க் வசதியுடன் இதுபோன்ற பிராசசர்களை உருவாக்க அதிகம் செலவு செய்ய வேண்டும். கூடுதலாக, ஏஐ மென்பொருள் மற்றும் அல்காரிதம் சிக்கலானவை, அதற்கும் கூடுதலாகச் செலவாகும். இவை அனைத்தும் சேர்ந்தே செல்போன் விலை அதிகரிக்கக் காரணமாக அமையலாம் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.