REMSpace ஆய்வு எக்ஸ் தளம்
டெக்

தூக்கத்தில் கனவுகளைப் பகிர்ந்து கொள்ளும் புதிய தொழில்நுட்பம்! சாதித்த ரெம்ஸ்பேஸ் நிறுவனம்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரெம்ஸ்பேஸ் (REMspace) தனது சிறப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரு நபர்கள் காணும் கனவுகளை பரிமாறிக்கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளது.

Jayashree A

நமது கனவில் நடக்கும் ஒரு நிகழ்வு உண்மையாக நடந்து இருக்கக்கூடாதா? என்று சில சமயம் ஏங்குவோம்… மேலும், நாம் கனவில் கண்டதை சம்பந்தபட்டவர்களிடம் நேரில் விவரிக்க முடியாதபடி திணறுவோம். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல  அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரெம்ஸ்பேஸ் (REMspace) தனது சிறப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரு நபர்கள் காணும் கனவுகளை பரிமாறிக்கொள்ளும் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளதாக கூறுகிறது. இது கேட்பவர்களுக்கு புனைவுக்கதை அல்லது மாயாஜால வித்தைப்போன்று தோன்றலாம். ஆனால் இது நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. அது என்ன என்பதை பார்க்கலாம்.

கனவு அலைகளை நினைவு அலைகளாக மாற்ற முடியுமா? என்பதை ஆராய்வதற்காக, அமெரிக்காவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரெம்ஸ்பேஸ் என்ற நிறுவனம், அடிக்கடி கனவு காணும் இரு நபர்களைத் தேர்வு செய்து அவர்களை கண்காணிப்புக்குள்ளான இடத்தில் தூங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.

REMSpace ஆய்வு

அவர்களும் நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கு உட்பட்டு தூங்கச் சென்றுள்ளனர். இருவரும் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றதும், Lucid (தெளிவான) கனவுகளை எதிர்கொண்டுள்ளனர். அதாவது, தூங்கும்போதும்கூட தாங்கள் கனவுலகில் இருக்கிறோம் என்பதை அறிந்திருப்பர். REM (Rapid Eye Movement) நிலை தூக்கத்தில் மட்டும்தான், இப்படியான தெளிவான கனவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் மூளை மிகவும் சுறுசுறுப்பாகவும் கனவுகள் தெளிவாகவும் இருக்கும்.

இப்படியாக கனவுகண்ட அவர்களின் மூளை அலைகள் ஒரு சர்வருடன் இணைக்கப்பட்டு, சென்சார்கள் அடங்கிய பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கருவி மூலம் கண்காணிக்கப்பட்டது. முதல் நபர் தனது கனவில் நுழைந்தவுடன், அவருக்கு 'ஜிலக்' என்ற வார்த்தை சர்வரின் உதவியுடன் இயர்பட்ஸ் வழியாக தெரிவிக்கப்பட்டது.

சர்வர் மூலமாக தனது கனவில் சொல்லப்பட்ட ஜிலக் வார்த்தையை திரும்பத் திரும்ப அந்த நபர் சத்தமாக சொல்லிவந்தார். இதன் மூலம் தூங்குபவர்கள் செய்தியைப் பெறமுடியும் என்பதை ரெம்ஸ்பேஸ் உறுதிப்படுத்தியது. மேலும் தூங்குபவரின் பதிலான ஜிலக் என்ற வார்த்தை சர்வரில் சேமிக்கப்பட்டது.

அதே போல் தூங்கிக்கொண்டும் கனவுகண்டு கொண்டும் இருந்த மற்றொரு நபரிடமும் ‘ஜிலக்’ என்ற சேமிக்கப்பட்ட வார்த்தையை சர்வர் அனுப்பியது. அதை கனவு வழியாக பெற்ற மற்றொரு நபரும், ஜிலக் என்ற வார்த்தையை உச்சரித்து தான் அந்த வார்த்தையை பெற்றதை உறுதிப்படுத்தி உள்ளார். தூக்கத்திலிருந்து விழித்தபின், தான் அந்த வார்த்தையை உறக்கத்தில் கேட்டதையும் உறுதிபடுத்தியுள்ளார்.

இதன்மூலம், கனவுகளின் வழியாக ஒருவர் மற்றொருவருக்கு தான் சொல்லவந்ததை அனுப்பவும், பெறவும் முடியும் என்று ரெம்ஸ்பேஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

REMSpace ஆய்வு

எளிமையான முறையில் கனவுகளை பரிமாறுவது என்பது மட்டுமன்றி, இது நனவு மற்றும் ஆழ் உலகங்களுக்கு (conscious and subconscious) இடையிலான இடைவளியைக் குறைக்கும் ஒரு வரலாற்று மைல்கல்லாகவும் பார்க்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் இன்னும் மற்ற விஞ்ஞானிகளால் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.

ஒருவேளை இந்த பரிசோதனைக்கு ஒப்புதல் கிடைத்தால் அது தூக்க ஆராய்ச்சிக்கான முக்கிய மைல்கல்லைக் குறிக்கும். மேலும் மனநல சிகிச்சை, திறன் பயிற்சி என்று பல பயன்பாடுகளுக்கு முக்கியமானதாக இருக்கும். அது மேம்படுகையில், இந்த அறிவியல் தொழில்நுட்பமானது நாளை நம் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகிவிடும் என்று RAMspace தெரிவித்துள்ளது.