ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஜியோ ஃபைபர் சேவையை அதிகாரப்பூர்வமாக இன்று முதல் தொடங்கியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ ஃபைபர் என்ற புதிய சேவையை தொடங்க திட்டமிட்டிருந்தது. இந்த சேவையின் மூலம் வீடுகளுக்கு ஃபைபர் வயர் மூலம் இணைய சேவை, வாய்ஸ் கால் சேவை, தொலைக்காட்சி சேவை, முக்கிய திரைப்பட ஆன்லைன் தளங்களுக்கான சந்தா ஆகியவற்றை ஒரே தளத்தில் தருவதாக அறிவித்திருந்தது. ஜியோவின் மூன்றாவது பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி முதல் இந்த திட்டம் அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முதல் ஜியோ ஃபைபர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 1600 நகரங்களில் இன்று முதல் ஜியோ ஃபைபர் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனம், “ஜியோ ஃபைபர், இணையதள இணைப்பு இல்லாதவர்களை இணைக்கும் முக்கிய பங்கை ஆற்றும். அத்துடன் அவர்களின் வாழ்க்கை தரத்தில் சில மாற்றங்களையும் கொண்டு வரும்” எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆகாஷ் அம்பானி, “எங்களது வாடிக்கையாளர்களே எங்களுக்கு முக்கியமானவர்கள். ஜியோ ஃபைபர் திட்டம் அவர்களுக்காகவே தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஜியோ ஃபைபர் பல முக்கிய பரிமாணங்களின் தொடக்கமாக அமையும். அத்துடன் இந்தச் சேவையை சிறப்பான முறையில் வழங்க நாங்கள் எப்போதும் முயற்சிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
புதிதாக அறிமுகபடுத்தப்பட்டுள்ள ஜியோ ஃபைபரில் 699ரூபாய் முதல் 8499 ரூபாய் வரை திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களில் குறைந்த பட்ச திட்டமான 699ரூபாய் திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் அளவு வேகத்தில் இணையதள சேவை வழங்கப்படவுள்ளது. அதேபோல அதிகபட்சமாக ஜியோ ஃபபர் மூலம் 1 ஜிபிபிஎஸ் அளவு வேகத்தில் இணையதள சேவை வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.