ரூ.500க்கு 100 ஜிபி டேட்டா என்ற புதிய திட்டத்துடன் பிராட்பேண்ட் சந்தையில் கால்பதிக்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜியோ ஃபைபர் என்ற பெயரில் தீபாவளி சமயத்தில் இந்த திட்டத்தைத் தொடங்க ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனம் கடந்தாண்டு செப்டம்பர் முதல் தொலைதொடர்பு துறை சேவைகளை வழங்கத் தொடங்கியது. ஜியோவின் வருகையால் இந்திய தொலைதொடர்புத் துறையில் போட்டி நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் போன்றவைகளும் குறைந்த விலையில் சேவைகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொலைதொடர்பு துறையை அடுத்து பிராட்பேண்ட் சந்தையிலும் கால்பதிக்க ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் சுமார் 2 கோடி பேர் பிராண்ட்பேண்ட் சேவையைப் பயன்படுத்திவரும் நிலையில், அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமே அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. ரூ.500க்கு 100 ஜி.பி. டேட்டா என்ற அடிப்படை திட்டத்துடன் சந்தையில் ஜியோ களமிறங்க இருப்பதாகத் தெரிகிறது. 100 ஜி.பி. டேட்டாவை மற்ற நிறுவனங்கள் வழங்கிவரும் விலையில், இது பாதியாகும். முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள மெட்ரோ நகரங்களில் பிராட்பேண்ட் சேவையை வர்த்தகரீதியில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கும் ஜியோ நிறுவனம், இந்தாண்டு இறுதிக்குள் 100 நகரங்களில் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.