இஸ்ரோ ராக்கெட் புதியதலைமுறை
டெக்

PSLV - C37 ராக்கெட்: உதிரி பாகத்தை வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் விழ வைத்த இஸ்ரோ...!

விண்வெளி குப்பைகளை அகற்றும் முயற்சியாக, 7 வருடங்களாக புவி வட்ட பாதையில் சுற்றித்திரிந்த PSLV-C37 ராக்கெட்டின் உதிரி பாகத்தை வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் விழவைத்துள்ளது இஸ்ரோ.

Jayashree A

2017- பிப்ரவரி 15ம் நாள் இஸ்ரோ PSLV-C37 ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டானது INS-1A, INS-1B, Al-Farabi 1, BGUSAT, DIDO-2, Nayif 1, PEASS, 88 Flock-3p செயற்கைக்கோள்கள் மற்றும் 8 Lemur-2 போன்ற முக்கியமான 104 செயற்கைக்கோளை ஒன்றாக கொண்டு, விண்ணில் செலுத்தப்பட்டது. இதன்மூலம் இஸ்ரோ 2017-ல் புதுவரலாற்றை படைத்தது.

இதனை முறியடிக்கும் வகையில், 2021ல் பால்கன் 9 ராக்கெட் மூலமாக 143 செயற்கைக்கோள்களை ஒரேநேரத்தில் விண்ணில் செலுத்தி நமது சாதனையை முறியடித்தது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

இந்நிலையில் 2017-ல் இஸ்ரோ அனுப்பிய PSLV-C37 ராக்கெட்டானது விண்ணில் செயற்கைக்கோளை அதனதன் இடத்தில் நிறுத்தியப்பிறகு ஒரு கழிவாக விண்வெளியில் சுற்றி வந்தது. இந்த ராக்கெட் மட்டுமில்லாமல், விண்வெளியில் பல எண்ணற்ற கழிவுகள் சுற்றி வருகிறது. இதை குறைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனொரு முயற்சியாக, கடந்த 7 வருடங்களாக விண்வெளியில் குட்பைப் போல சுற்றிவந்த PSLV-C37 ராக்கெட்டின் கழிவான பிஎஸ்4 என்ற முன்பாகத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கடந்த 6ம் தேதி வடக்கு அட்லாண்டிக் கடலில் விழச்செய்தனர்.

விண்வெளிக் கழிவுகளால் ஏற்படும் இடர்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெளியுறவு கொள்கைகளின் படி விழுந்த பாகங்கள் கடலில் இருந்து அப்புறப்படுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.