போகிமான் கோ என்ற மொபைல் கேம் இப்போது புதிய வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
போகிமான் கோ என்பது ஒரு மொபைல் விளையாட்டு. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் மொபைல்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். கடந்த வருடம் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வீடியோ கேம், ஒரே மாதத்தில் அதிக வருவாய் ஈட்டிய கேம் என்ற சாதனையையும் பெற்றது.
ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தின் மூலம் மாயை உருவங்களை தோற்றுவித்து அவற்றுடன் மல்லுக் கட்ட வைக்கும் இந்த விளையாட்டினால் உலகின் பல பகுதிகளிலும் விபத்துக்கள் ஏற்பட்டதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் பல நாடுகளில் இந்த விளையாட்டை தடை செய்தனர். இருப்பினும் போக்கிமோன் கோ- வின் அட்டகாசமும் ஆரவாரமும் இளைஞர்கள் மத்தியில் இன்னும் குறையவில்லை எனலாம்.
இந்நிலையில், தற்போது நியாண்டிக் நிறுவனம் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான புதிய பதிப்பினை வெளியிட்டுள்ளது. இப்பதிப்பில் சில குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு புதிய அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கேமில் லெஜெண்டரி போகிமான்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சாம்போஸ், ஆர்டூனோ, மோல்ட்ரெஸ், லூகா போன்ற உயிரினங்கள், முட்டையில் இருந்து வெளியேறி, பிரமாண்டமாய் உருவெடுத்து துரத்துவது போலவும், அதனை நாம் வேட்டையாடுவது போலவும் கேம் உருவாக்கப்பட்டுள்ளது.
உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போகிமான் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.