chat gpt chat gpt
டெக்

'சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தால் மனித வேலைகள் பறிபோகுமா?' - டிசிஸ் அதிகாரி ’சார்ப்’ பதில்

'சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தால் மனித வேலைகள் பறிபோகுமா?' - டிசிஸ் அதிகாரி ’சார்ப்’ பதில்

webteam

சாட்ஜிபிடி குறித்த சாதகங்கள் இன்னும் இரண்டு வருடங்களில் நமக்கு தெளிவாக தெரியவரும். இதன் விளைவாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் சில மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார் டிசிஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட்.  

செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் இயங்கும் 'சாட் ஜி.பி.டி.' தொழில்நுட்பத்தை ஓபன்-ஏஐ  (OpenAI) நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. வருங்காலத்தில் உலகை ஆளப்போவதாக கருதப்படும் 'சாட்-ஜி.பி.டி.' தொழில்நுட்பத்தின் வரவு குறித்து இன்றைக்குப் பல தளங்களிலும் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது.

இந்த நிலையில், சாட்ஜிபிடி செயற்கை நுண்ணறிவு தளங்கள் ஒரு சக பணியாளராக இருக்குமே தவிர அது மனித வேலைக்கு மாற்றாகாது எனக் கருத்து தெரிவித்துள்ளது 6 லட்சத்துக்கும் மேலான ஊழியர்களை கொண்டுள்ள டிசிஸ் (டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்) தகவல் தொழில்நுட்ப நிறுவனம். டிசிஸ் நிறுவனத்தின் தலைமை மனித வள அதிகாரி மிலிந்த் லக்காட் அளித்துள்ள பேட்டி ஒன்றில் செயற்கை நுண்ணறிவின் பின்னணியில் இயங்கும் சாட் ஜி.பி.டி. குறித்து தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். 

அதில் அவர், ''சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு தளங்கள்  உற்பத்தியை மேம்படுத்த உதவும். ஆனால், அவற்றால் நிறுவனங்களுக்கான வணிக மாதிரிகளை மாற்ற முடியாது. சாட்ஜிபிடி ஒரு சக பணியாளராக செயல்படும். அதேசமயம் அது வாடிக்கையாளரின் சூழலை புரிந்து கொள்ள நேரம் எடுக்கும். 

செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்த கட்ட புரட்சியாக சாட்ஜிபிடி நிச்சயம் இருக்கும். செயற்கை நுண்ணறிவு வருகையால் ஊழியர்களின் வேலை பறிபோகும் என்பது உண்மையல்ல. அதேசமயம் அவற்றால் வேலைக்கான வரையறைகள் மாறக்கூடும். சாட்ஜிபிடி எதிர்காலத்திற்கு தேவையான ஒரு நல்ல விஷயம். இது இணைய உலகில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதைவிட, டிஜிட்டல் உலகிற்கு ஒத்துழைப்பு தரும் தொழில்நுட்பமாக இருக்கும்.

இத்தகைய தொழில்நுட்பம்  உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், வழங்கப்படும் வேலையின் நிலைத்தன்மையை மேம்படுத்தவும், நிர்வாகத்தின் தேவையைக் குறைக்கவும், விநியோகத்தின் வேகத்தை அதிகரிக்கவும், புறச் செயல்பாடுகளின் தேவையைக் குறைக்கவும் உதவும். சாட்ஜிபிடி குறித்த சாதகங்கள் இன்னும் இரண்டு வருடங்களில் நமக்கு தெளிவாக தெரியவரும்.

இதன் விளைவாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியில் சில மாற்றங்கள் இருக்கும். எங்களது நிறுவனம் இந்த அம்சத்தில் அதிக கவனம் செலுத்துகிறது'' என்று லக்காட் கூறினார்.