pension scam web
டெக்

ஓய்வூதியம் பெறுவோர் எச்சரிக்கை... ஜீவன் பிரமான் சான்றிதழ் புதுப்பிப்பதாக WhatsApp-ல் மோசடி! உஷார்!

ஓய்வூதியம் பெறுவோர் இந்த மோசடிக்கு ஆளாகாமல் தங்களைக் காத்துக் கொள்ள அரசு தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

Rishan Vengai

மத்திய ஓய்வூதியக் கணக்கியல் அலுவலகத்தின் (CPAO) அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடியாளர்களால் ஓய்வூதியம் பெறுவோர் அதிகளவில் குறிவைக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ஓய்வூதியதாரர்களுக்கு போலி படிவங்களை அனுப்புகிறார்கள் என்றும், அவற்றை பூர்த்தி செய்யாவிட்டால் அடுத்த மாதம் உங்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று கூறி மோசடியில் ஈடுபட்டுவருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவோர் முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். CPAO அல்லது ஏதேனும் அரசு நிறுவனத்திடமிருந்து வந்ததாகக் கூறும் செய்தி இருந்தால், அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும். ஏனென்றால் அரசு நிறுவனங்கள் பொதுவாக வாட்ஸ்அப் அல்லது பிற முறைசாரா சேனல்கள் மூலம் தனிப்பட்ட தகவல்களைக் ஒருபோதும் கோருவதில்லை.

அது என்ன ஓய்வூதிய பண மோசடி..

மத்திய ஓய்வூதிய கணக்கியல் அலுவலகத்தின் (CPAO) செய்தித் தொடர்பாளர் அறிவித்திருக்கும் கருத்துப்படி, இந்த மோசடியில் ஈடுபடுவோர் ஓய்வூதியதாரர்களிடமிருந்து முக்கியமான தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களைத் (PPO எண்கள்) திருட முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

இந்த மோசடியானது பொதுவாக ‘அரசு அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்வது, உங்கள் ஓய்வூதிய ஜீவன் பிரமான் சான்றிதழ் காலாவதி ஆகப்போகிறது’ எனக்கூறி நடக்கிறது.

ஓய்வூதியம்

அதன்படி, ‘ஓய்வூதியம் பெறுவதற்கான ஜீவன் பிரமான் சான்றிதழ் காலாவதி ஆகப்போகிறது’ என்றும், ‘அதனை விரைவில் புதுப்பிக்க வங்கிக் கணக்கு விவரங்கள் அல்லது பென்ஷன் பேமென்ட் ஆர்டர் (PPO) எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைக் இந்த படிவத்தில் பதிவிட்டு புதிப்பித்துகொள்ளுங்கள்’ என்று புதிய லிங்க் அல்லது ஸ்கீம் படிவம் வாட்ஸ்அப் எண்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இது மோசடி என்று அறியாமல் ஓய்வூதியம் பெறுபவர் விவரங்களை உள்ளிட்டுவிட்டால், அந்தத் தகவல் சமர்ப்பிக்கப்பட்டவுடன், மோசடி செய்பவர்கள் அடையாளத் திருட்டு அல்லது நிதி மோசடிக்காக அதைப் பயன்படுத்துகின்றனர்.

ஓய்வூதியம்

ஓய்வூதியம் பெறுவோர் இத்தகைய மோசடிக்கு ஆளாகாமல் பாதுகாப்பாக இருக்க அரசு தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க என்ன வழி?

  • முதலாவதாக, ஜீவன் பிரமான் சான்றிதழ்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றங்கள் வாட்ஸ்அப் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் ஒருபோதும் நடத்தப்படுவதில்லை. அதனால் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதையோ அல்லது தெரியாத மூலங்களிலிருந்து இணைப்புகளைப் பதிவிறக்குவதையோ ஓய்வூதியதாரர்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • ஒருபோதும் வாட்ஸ்அப் வழியாக வங்கி கணக்கு விவரங்கள் அல்லது பிபிஓ எண்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைப் பகிரக்கூடாது.

  • ஜீவன் பிரமான் சான்றிதழ் தொடர்பான முறையான சந்தேகங்களுக்கு, ஓய்வூதியதாரர்கள் தங்கள் வங்கிகளை நேரடியாகத் தொடர்புகொள்ள அல்லது அதிகாரப்பூர்வ CPAO இணையதளத்தைப் பார்வையிட ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

  • மோசடியை எதிர்த்துப் போராடுவதில் முக்கியமானது சந்தேகத்திற்குரிய வகையில் மெசேஜ் ஏதும் வந்தால் உடனடியாக புகாரளிக்க வேண்டியது அவசியம். இந்த புகாரை தேசிய சைபர் கிரைம் அறிக்கையிடல் போர்ட்டலுக்கு (NCRP) அனுப்பலாம் அல்லது உள்ளூர் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளிக்கலாம்.