டெக்

பெகாசஸ் உளவு விவகாரம்: உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

பெகாசஸ் உளவு விவகாரம்: உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

Veeramani

பெகாசஸ் செயலியின் மூலம் உளவு பார்க்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பெகாசஸ் என்ற உளவு செயலியின் மூலம் இந்தியாவில் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் என பல தரப்பினரது தொலைபேசி எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதை ஒன்றிய அரசு மறுத்தாலும், ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்த பிரச்னை குறித்து விசாரித்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை அளிக்க ஏதுவாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சுயேச்சையான ஒரு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று ஒன்றிய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

இந்தியாவில் உச்சநீதிமன்ற நீதிபதி, தற்போது ஒன்றிய அமைச்சர்களாக இருப்பவர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், ஊடகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என பலதரப்பினரதும் தொலைபேசி எண்களும் இந்த உளவுச் செயலியால் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்த உண்மைகளைக் கண்டறிந்து குற்றவாளிகளைத் தண்டிக்க ஒன்றிய அரசு நீதிவிசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்