ஒருபுறம் டிவிட்டர் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியானது அதிகமாக இருந்து வரும் நிலையில், மறுபுறம் கூகுள் மற்றும் OpenAI நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியும் AI-தொழில்நுட்பத்தில் சூடுபிடித்துள்ளது.
கூகுள் நிறுவனமானது தொடங்கிய காலத்திலிருந்து ஏறுமுகத்தை மட்டுமே கண்டுவந்தது. ஒரு வார்த்தையை தேடலில் தட்டினால் போதும், அதை சார்ந்து உலகத்தில் இருக்கும் அத்தனை தகவல்களையும் கொண்டு வந்து கைகளில் கொட்டிவிடும். நாளுக்கு நாள் அதீத வளர்ச்சியை கண்டுவந்த கூகுள், உலகத்தின் ஒவ்வொரு மனிதனின் விரல்களையும் தன்பால் ஈர்க்காமல் இல்லை. தற்போது கூகுளை பயன்படுத்தாத மனிதனை பார்ப்பதே அரிதான விசயமாக தான் இருக்கிறது.
சில வருடங்களுக்கு முன்னால் கூகுளுக்கு போட்டியாக ஏதாவது தொழில்நுட்பம் வரும், அது கூகுளின் வளர்ச்சியை குறுகிய காலத்தில் எட்டிவிடும் என்று சொன்னால் அதை யாரும் நம்பியிருக்கவே மாட்டார்கள். ஆனால் அதை செயலில் செய்துகாட்டியது OpenAI நிறுவனத்தின் ChatGPT தொழில்நுட்பம். ChatGPT அதன் அறிமுகத்திற்குப் பிறகு மக்களிடம் சென்றடைந்ததில் ஒரு விண்கல் உயர்வைக் கண்டது. 100 மில்லியன் பயனர்களைப் பெற்ற அதிவேக பயன்பாடாக chatbot புதிய ரெக்கார்ட் படைத்தது, அதுவும் அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களில். Facebook, Snapchat மற்றும் Myspace போன்ற தொழில்நுட்பங்கள் இந்த எண்ணிக்கையை அடைய கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் எடுத்துக்கொண்டன. இந்நிலையில், கூகுள் கில்லர் என்றழைக்கப்பட்ட சாட்ஜிபிடி தன் வளர்ச்சியை தற்போது உலகத்தில் உள்ள அனைத்து மொபைல் பயன்பாட்டாளர்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.
சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தின் நிறுவனமான OpenAI, ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தக்கூடிய ChatGPT APP-ஐ அறிமுகம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ஐ-போன் பயன்பாட்டாளர்களுக்கு இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பல ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்களின் எதிர்ப்பார்ப்பாகவே இருந்து வந்தது. தற்போது அத்தனை பேரின் எதிர்ப்பார்ப்பிற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது OpenAI.
தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை அறிவித்திருக்கும் ஓபன்ஏஐ, “ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தக்கூடிய சாட்ஜிபிடி செயலி வெளியிடப்படும். இன்று முதல் அந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் முன்கூட்டியே ரிஜிஸ்டர் செய்துகொள்ளலாம்” என்று அறிவித்து அதற்கான கூகுள் பிளே ஸ்டோர் லிங்கையும் பதிவிட்டுள்ளது.
சாட்ஜிபிடி தொடங்கப்பட்ட குறுகிய காலத்தில் உலகலாவிய பேசுபொருளாக மாறியது. அதற்கு காரணம், அதன் விரிவான மற்றும் தெளிவான பதில்கள் விரைவாக கவனத்தை ஈர்த்தது. எதைப் பற்றிய விவரமாக இருந்தாலும், கதை கட்டுரை, இலக்கியம், புராணம், அறிவியல், தொலைதொடர்பு, வானியல்... இப்படி பல விஷயங்களை அதன் தொடர்புடைய செய்திகளை உடனுக்குடன் தருவதால், இது கூகுள் கில்லர் என்றும் தொடங்கத்தில் அறியப்பட்டது.
இந்நிலையில், சாட்ஜிபிடியின் அதிவேக வளர்ச்சியை கண்ட கூகுள் நிறுவனமானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சொந்த பதிப்பாக Google Bard என்பதை சரியான நேரத்தில் களமிறக்கியது. ChatGPT-ன் முதல் பதிப்பை போன்றே Google Bard-ம் மொபைல் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லாமல் இணையதள பக்கங்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாகவே அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது ChatGPT அதன் பயன்பாட்டை மொபைல் பயனாளர்கள் இடையேயும் கொண்டு செல்லும் இந்த முயற்சியானது, நிச்சயம் கூகுளுக்கு போட்டியை ஏற்படுத்தும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் கூகுளும் தனது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட முயற்சியை கையில் எடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ChatGPT என்றால் என்னவென்று அறிமுகமில்லாதவர்களுக்கு, ChatGPT என்பது உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும், உங்களுடன் உரையாடவும் உதவும் ஒரு பயனுள்ள சாட்போட் ஆகும். மொபைல் பயன்பாட்டிற்காக இது முதலில் மே மாதம் iOSக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், அதன் ஆண்ட்ராய்டு வெளியீட்டிற்காக பலர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.