டெக்

கூகுள் பே, போன்பே மூலம் பணம் திருட்டு ! மோசடி பேர்வழிகளை தேடும் காவல்துறை

கூகுள் பே, போன்பே மூலம் பணம் திருட்டு ! மோசடி பேர்வழிகளை தேடும் காவல்துறை

webteam

கூகுள் சர்ச்சில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களின் கஸ்டமர் கேர் எண்ணுக்கு பதில் தங்கள் எண்ணை பதிவிட்டு அதை தொடர்பு கொள்பவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடும் மோசடிப் பேர்வழிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

வங்கி, தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களின் கஸ்டமர் கேர் எண்ணை கூகுளில் தேடுவதுதான் பெரும்பாலானோரின் வழக்கம். அவ்வாறு தேடுபவர்கள் கண்ணில் உண்மையான கஸ்டமர் கேர் எண்ணுக்கு பதில் தங்கள் எண் படும் வகையில் கூகுள் சர்ச்-ல் மோசடிப் பேர்வழிகள் பதிவு செய்து வைத்துவிடுவர்.

பொதுவாக ஆன்லைன் மூலம் வாங்கும் பொருளில் ஏதேனும் பிரச்னை இருந்தாலோ அல்லது பொருள் மாறி வந்துவிட்டாலோ கஸ்டமர் கேர்-ஐ பயன்படுத்தி பணத்தை திருப்பிக் கேட்பது வாடிக்கையாளர்களின் வழக்கம். அவ்வாறு ஸ்நாப் டீல் (SNAP DEAL)-ல் பொருள் வாங்கிய சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த இளைஞர் கூகுள் சர்ச் மூலம் கஸ்டமர் கேர் எண்ணை எடுத்து தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அது மோசடிப் பேர்வழியின் எண். 

எதிர்முனையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசிய நபரிடம் தான் ஆர்டர் செய்த பொருளுக்கு பதில் வேறு பொருள் வந்திருப்பதாக கூறியுள்ளார் அந்த இளைஞர். தவறுக்கு வருத்தம் தெரிவித்த அந்த நபர், கூகுள் பே செயலி மூலம் பணத்தை திருப்பித் தருவதாகக் கூறியுள்ளார். கூகுள் பேயை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யும்படி அவர் கூற அந்த இளைஞரும் அவ்வாறே செய்துள்ளார். 

அப்போது அந்த இளைஞரின் செல்போனுக்கு வந்த OTP-ஐயும் கேட்டுப் பெற்றுள்ளார் மோசடி நபர். சிறிது நேரத்தில் இளைஞரின் வங்கிக்கணக்கில் இருந்து 27 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது. அதிர்ச்சியடைந்த இளைஞர் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகாரளித்துள்ளார். இது போல் ஒரு நாளைக்கு சராசரியாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவிற்கு 8 புகார்கள் வருகின்றன. 

மோசடிப் பேர்வழிகள் பெரும்பாலும் பணத்தை திருட பயன்படுத்துவது GOOGLE PAY, PHONEPAY, PAYTM போன்ற பணபரிவர்த்தனை செயலிகளைத்தான் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பண பரிவர்த்தனைகளில் OTP என்பது முக்கியம் என்றும், தொலைபேசி மூலம் யாரேனும்  OTP எண்ணை கேட்டால் நாம் கவனமாக இருக்க வேண்டுமென்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.