டெக்

“உன்னை அடிச்சிக்கவே முடியாது”.. ஃபேஸ்புக்கில் வந்த புது விஷயம்.!

“உன்னை அடிச்சிக்கவே முடியாது”.. ஃபேஸ்புக்கில் வந்த புது விஷயம்.!

webteam

ஃபேஸ்புக் கமெண்ட்டில் “உன்னை அடிச்சிக்கவே முடியாது” என டைப் செய்தால் அதன் எழுத்து நிறம் மாறுவதோடு அனிமேஷனும் கிடைக்கும். ஃபேஸ்புக்கில் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்துவோரை குஷிப்படுத்தும் விதமான ஃபேஸ்புக் நிறுவனம் அதற்கேற்றவாறு கோடிங் எழுதியுள்ளது.

சிட்டி முதல் பட்டி தொட்டி எங்கும் ஃபேஸ்புக் பயன்பாடு வந்துவிட்டது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் முகநூலில் புகுந்து விளையாட ஆரம்பித்துவிட்டனர். இதனால் பயனாளர்களை குஷிப்படுத்தும் விதமாக ஃபேஸ்புக்கும் அடிக்கடி பல்வேறு அப்டேட்களை செய்து வருகிறது. நாம் மறந்தால் கூட நண்பர்களின் பிறந்த நாளை ஞாபகப்படுத்துகிறது. கடந்த காலங்களில் என்ன பதிவுகள் செய்தோம் என்பதை நம் கண் முன்னே நிறுத்துகிறது. எத்தனை விருப்பங்கள் வந்துள்ளன. மொத்தமுள்ள ஃபேஸ்புக் நண்பர்களில் எந்த நண்பர் நமக்கு அதிக விருப்பம் தெரிவித்திருக்கிறார் என்பதை கூட தெரியப்படுத்துகிறது. இது ஃபேஸ்புக் நமக்கு கொடுக்கும் ஒரு சின்ன சின்ன சந்தோஷம்.

அதேபோல யாருக்காவது நாம் வாழ்த்து தெரிவிப்பதற்காக ‘congrats’, ‘வாழ்த்துகள்’ போன்ற வார்த்தைகளை கமெண்டில் பதிவிடும் போது கமெண்டின் நிறம் அழகாக மாறிவிடும். அதுமட்டுமில்லாமல் அழகான அனிமேஷனும் உண்டாகும். சட்டென தோன்றி மறையும் அந்த அனிமேஷனை நாம் காணும் போது சின்ன மகிழ்ச்சி உண்டாகும். இந்நிலையில் ஃபேஸ்புக் கமெண்டில் “உன்னை அடிச்சிக்கவே முடியாது” என டைப் செய்யும் பட்சத்தில் அதன் நிறம் மாறுவதோடு சிறப்பான அனிமேஷனும் கிடைக்கிறது. இப்போது ஃபேஸ்புக் பயன்படுத்தும் தமிழ் பயனாளர்கள் பலரும் தங்களது பெயர்களை கூட முகநூலில் தமிழில் தான் வைத்துள்ளனர். பெரும்பாலான பதிவுகளையும் அவர்கள் தமிழிலேயே பதிவு செய்கின்றனர். நண்பர்களுக்கு கமெண்ட் இடுவதையும் கூட தமிழிலேயே இடுகின்றனர். இந்நிலையில் தமிழ் பயனார்கள் தொடர்ந்து ஃபேஸ்புக் வருவதை ஊக்கப்படுத்தும் விதமாக “உன்னை அடிச்சிக்கவே முடியாது” என்பதற்கும் ஃபேஸ்புக் அனிமேஷன் உண்டாக்கியுள்ளது.

ஏற்கனவே ‘GRATULA‘ என்னும் வார்த்தையை டைப் செய்தால் அனிமேஷன் கிடைக்கும் வகையில் ஃபேஸ்புக் கோடிங் எழுதியிருந்தது. ஆனால் இது கநூலில் நமது கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை கண்டறியவே கொண்டுவரப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. அனிமேஷன் கிடைக்காதவர்கள் முகநூலின் பாஸ்வேர்டை மாற்ற வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. உண்மையில் இப்படிப்பட்ட அனிமேஷன்கள் பயனாளர்களை மகிழ்விக்க கொண்டுவரப்பட்டதே தவிர நமது அக்கவுண்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அல்ல.