சர்வதேச விண்வெளியில் சுற்றிவரும் விண்கலத்தில், புதுவகை பாக்டீரியா ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இது அங்குள்ள ஆய்வாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுகுறித்து மூத்த விஞ்ஞானியான த.வி.வெங்கடேஸ்வரன் நம்மிடையே பேசிய பொழுது,
“பூமியிலிருந்து சுமார் 500 கிலோ மீட்டர் உயரத்தில், விண்வெளியில் இருந்தபடி 90 நிமிடத்துக்கு ஒரு முறை பூமியை சுத்தி வருகிறது சர்வதேச விண்வெளி நிலையம். அந்த விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்ற விண்கலத்தில் மருந்துகளுக்கு கட்டுப்படாத ஒரு பாக்டீரியா இருப்பதை சில விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளார்கள்.
சர்வதேச விண்வெளி மையத்தை பொறுத்தவரை, அங்கு நவம்பர் 2000 ஆண்டிலிருந்து தொடர்ந்து மனிதர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். விண்வெளி நிலையத்தில் எப்பொழுதும் 3 பேர் பணி செய்துக்கொண்டு இருப்பார்கள். சில சமயம் வேறு குழு அங்கு சென்றால், ஆறு பேர் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.
இந்தக் குழுவினர் உடுத்துகின்ற உடை, அவர்கள் உட்கொள்ளும் உணவு போன்ற பல்வேறு பொருட்கள் வழியாக விண்வெளி நிலையத்தில் நுண்ணுயிர் போய் சேர்ந்து இருக்கலாம் என்ற கருத்து நிலவி வந்தது. மட்டுமன்றி இந்த விண்கலத்திற்குள் குறைவான ஈர்ப்பு விசை, கூடுதலான கார்பன் டை ஆக்சைடு போன்றவை இருக்கும். இதுபோன்ற சிறப்பு சூழலில் விண்வெளி நிலையத்தின் இடுக்குகளில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் தங்கி வளர்ந்து வளரக்கூடும்.
இதையெல்லாம் கருத்தில்கொண்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் விண்வெளி நிலையத்தில் என்னென்ன வகையான நுண்ணுயிர்கள் இருக்கிறது என்று சோதனை செய்வதற்காக, ஒரு நுண்ணுயிர் கண்காணிப்பு பணியை சர்வதேச விண்வெளி மையத்தில் மேற்கொண்டார்கள்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக விண்வெளி நிலையத்தில் நடைபெற்ற அந்த ஆய்வின் முடிவில், அங்கு சில நுண்ணுயிரிகளை கண்டுபிடித்து தற்போது அடையாளம் கண்டுள்ளனர். இதில் Enterobacter bugandensis (எண்டோரோபாக்டர் புகெண்டென்சிஸ்) என்ற பாக்டீரியா 13 வேற்று உருவங்களுடன் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
பூமியில் இந்த வகையான பாக்டீரியாக்கள் மனிதர்களின் இரைப்பை, குடல் போன்றவற்றில் காண கிடைக்கும். இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டால் நுரையீரல் கோளாறு, தோல் , மென்மையான திசுக்களில் தொற்று, மற்றும் சிறுநீர் கோளாறு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படக்கூடும்.
விண்வெளியில் கண்டெடுக்கப்பட்ட இத்தகைய பாக்டீரியாவை ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அதில் Transmutation என்று சொல்லக்கூடிய திடீர் மரபணு மாற்றம் ஏற்பட்டு உள்ளது. ஆகவே இது மருந்துக்கு கட்டுப்படாத ஒரு பாக்டீரியா போன்று இருப்பதாக அங்குள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
நீண்ட காலம் விண்வெளி பயணங்கள் தொடரும் பொழுது எந்த வகையான நோய்கள் நம்மை தாக்கலாம் என்பதை இந்த ஆய்வு நமக்கு உணர்த்தி உள்ளது. அதேபோல விண்வெளியில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளில் பரிமாண வளர்ச்சி ஏற்படும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆராய்ச்சியின் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஐந்து பேர் கொண்ட குழு இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இந்த 5 பேருமே இந்திய வம்சாவளியை சார்ந்தவர்கள். இந்தியர்கள் இதிலும் கொடிகட்டி பறக்கிறார்கள் என்பது சிறப்பான செய்தி” என்றார்.