நடப்பு மக்களவைத் தேர்தலில் பரப்புரை தகவல்களை அதிகம் பேருக்கு பகிரும் வகையில் வாட்ஸ் அப் செயலி ஹேக் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.
வாட்ஸ் அப் செயலியின் மூலம் ஒரே நேரத்தில் ஒரு தகவலை ஐந்து நபர்களுக்கு மேல் பகிரமுடியுமா என்றால் முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் பதிலளிக்கும். ஆனால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில் பரப்புரை தொடர்பான தகவல்கள் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பயனர்களுக்கு பகிரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாட்ஸ் அப் செயலி வழியே பொய்த் தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்க, ஐந்து பயனர்களுக்கு மட்டுமே ஒரே நேரத்தில் ஒரு தகவல் பகிரப்படும் நடைமுறை ஏற்கெனவே அமலில் உள்ளது. ஆனால் வாட்ஸ் அப் செயலியின் இந்த விதிமுறை, நடப்பு மக்களவைத் தேர்தலில் மீறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது வாட்ஸ் அப் செயலி போன்று காட்சியளிக்கும் GB WHATSAPP, JT WHATSAPP ஆகிய செயலிகள் வழியே பரப்புரை தகவல்கள் அதிகமாக வாக்காளர்களுக்கு பகிரப்பட்டுள்ளது. முன்னதாக இச்செயலிகளை பயன்படுத்தினால் பயனர்களின் கணக்கு தடை செய்யப்படுமென வாட்ஸ் அப் நிறுவனம் கூறி இருந்தது.
சில ஆன்லைன் மென்பொருள்கள் மூலம் வாட்ஸ் அப் செயலியின் தகவல் அனுப்பும் முறை கட்டுப்படுத்தப்பட்டு, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு செய்திகள் அனுப்பப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும் BUSINESS SENDER என்ற மென்பொருள் வழியே வாட்ஸ்அப் செயலியின் விதிமுறைகள் மீறப்பட்டு, ஆயிரத்துக்கு மேற்பட்ட பயனர்களுக்கு ஒரே நேரத்தில் செய்தி அனுப்பப்பட்டதாக ராய்ட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்களை கவர வாட்ஸ் அப் செயலி அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில் வாட்ஸ் அப் மீது தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விதிமீறல்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் என்ன பதிலளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.