மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வந்த இ-சேவை மையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 6 மாதமாக வாக்காளர் அடையாள அட்டை எடுக்க முடியாமல் அப்பகுதி மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் செயல்படும் இ-சேவை மையத்திற்கு, தனி வட்டாட்சியர் நியமிக்கப்பட்டு அவர் மூலமாக மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து தாலுகாக்களிலும், பல்வேறு இடங்களில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் மூலம் மட்டுமே வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்படும் அனைத்து சான்றிதல்களுக்கும் பொதுமக்கள் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் பரிசீலனைக்கு சென்று, அங்கு அவர்கள் அனுமதி வழங்கிய பிறகு உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2016 ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அரசு வெளியிட்ட வாக்காளர் பட்டியலின்படி 2,62,790 வாக்காளர்கள் இருந்துள்ளனர். இதைத்தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரசு வெளியிட்ட வாக்காளர் பட்டியல் படி 2,87,142 வாக்காளர்களாக இருந்துள்ளனர். இந்த வாக்காளர் பட்டியலின்படி ஐந்து ஆண்டுகளில் 24,352 பேர் புதிய வாக்காளர்கள் இடம்பற்றுள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் வாக்களிக்கத் தகுதியானவர்கள் மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ-சேவை மையத்தில் புதிய வாக்காளர் அடையாள அட்டை எடுப்பதற்காக வருகை தருகின்றனர்.
ஆனால் மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் இ சேவை மையத்தில் இணையதள சேவை புதுப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கான புதிய கடவுச்சொல்லை வழங்காததால் வாக்காளர் அடையாள அட்டை புதுப்பித்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், உள்ளிட்ட பணிகள் கடந்த ஆறு மாத காலமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை தனி வட்டாட்சியர் அவர்களுக்கு புகார் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் இ சேவை மையத்தில் பணியாற்றக்கூடிய ஊழியரிடம் அன்றாடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.