instagram face filters web
டெக்

Instagram பயனர்களுக்கு அதிர்ச்சி.. முகத்தோற்றத்தை அழகாக காட்டும் Beauty Filters-ஐ நீக்கும் மெட்டா!

Rishan Vengai

இளம்வயதினர்களிடையே இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவது அதிகரித்து வரும் நிலையில், மெட்டா நிறுவனம் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. பயனர்களின் வசதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது.

அதன்படி சமீபத்தில் மெட்டா நிறுவனமானது இன்ஸ்டாகிராமில் பதின்ம வயது பயனாளர்களை பாதுகாக்கும் வகையில், ‘டீன் அக்கவுண்ட்ஸ்’ என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி டீன் அக்கவுன்டர்களின் கணக்குகளை அவர்களுடைய பெற்றோரும் இனி கன்ட்ரோல் செய்யப்படும்.

அந்த அம்சத்தின் படி, இனி 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஆட்டோமேடிக்காக ப்ரைவேசி புரோடெக்சன் மோடிற்கு ஆக்டிவேட் ஆகிவிடும். யாரெல்லாம் அவர்களை தொடர்பு கொள்ள முடியும் என்பதை கட்டுப்படுத்துவதோடு, ஃபாலோ செய்யாதவர்கள் அவர்களுக்கு மெசேஜ் அனுப்பவோ டேக் செய்யவோ முடியாது. 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான Feed-ம் ஃபில்டர் செய்யப்பட்டு பாதுகாப்புடன் தகவல்கள் டிஸ்ப்ளே செய்யப்படும். தூங்கும் நேரத்தை கூட பெற்றோர்களால் நிர்வகிக்க முடியும்.

இந்த டீன் அக்கவுன்ட்டின் செட்டிங்ஸை பெற்றோர்கள் கண்ட்ரோல் செய்ய முடியும். இதை மாற்ற வேண்டுமானால் பெற்றோர்களால் மட்டுமே முடியும். இது மிகப்பெரிய முன்னெடுப்பாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மெட்டா அறிவித்திருக்கும் இன்னொரு அறிவிப்பானது எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது 90% மெட்டா ஆப் பயன்பாட்டாளர்களால் விரும்பப்படும் Beauty Filters அம்சமானது, இனிமேல் Instagram, FB, Whatsapp பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு கிடைக்காது என அறிவித்துள்ளது. அதற்கான காரணத்தையும் மெட்டா தெரிவுப்படுத்தியுள்ளது.

ஜனவரி 2025-லிருந்து நீக்கப்படும் Beauty Filters!

மெட்டா அறிவித்திருக்கும் அறிவிப்பின் படி, இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த ஆக்மென்டட் ரியாலிட்டி எனப்படும் AR அழகு ஃபில்டர்களுக்கு விரைவில் விடை கொடுப்பார்கள். இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா, மூன்றாம் தரப்பு AR கருவிகள் மற்றும் உள்ளடக்கத்திற்கான மெட்டா ஸ்பார்க் இயங்குதளத்தை ஜனவரி 14, 2025 அன்று நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி இனி இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களால் முகத்தை அழகாக மாற்றும் அழகு வடிப்பான்களை பயன்படுத்த முடியாது.

மில்லியன் கணக்கான இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு அழகு வடிப்பான்கள் அம்சமானது (Beauty Filters) தினசரி பிரதானமாகிவிட்டது. சொல்லப்போனால் அதனைப் பயன்படுத்துவதற்காக மட்டுமே இன்ஸ்டா அக்கவுண்ட்டுகள் வைத்திருப்பவர்கள் அதிகம் என்றே கூறலாம். அதில் சிறப்பாக இடம்பெற்றுள்ள விளையாட்டுத்தனமான விலங்கு காதுகள் முதல் டிஜிட்டல் மேக்கப் வரை அனைத்தையும் கொண்டு செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்பவர்கள் ஏராளம். இப்படி அதிகப்படியான விருப்பமான அம்சமாக இருந்தபோதிலும் அதனை நிறுத்துவதை மெட்டா நிறுவனம் உறுதிப்பட தெரிவித்துள்ளது.

இதற்கு காரணமாக, அழகுபடுத்தும் AR வடிப்பான்களின் பயன்பாடு நீண்டகாலமாக இளம் பெண்களுக்கு தங்களுடைய அழகின் மீதான அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் உடல் உருவ பிரச்சனைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிக வெற்றிகரமான இயங்குதளமாக இருந்த மெட்டா ஸ்பார்க்கின் சகாப்தத்தின் முடிவை இது குறிக்கிறது.