டெக்

உலக ஸ்மார்ட்போன் திருவிழா - களமிறங்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

உலக ஸ்மார்ட்போன் திருவிழா - களமிறங்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

webteam

ஸ்மார்ட்போன்களில் உள்ள வசதிகளும் அவற்றின் வடிவமைப்பும் அதிவேகமாக மாறிவருகின்றன. இந்நிலையில், ஸ்மார்ட்போன்களில் அடுத்து வர உள்ள மாற்றங்கள் என்ன என்பதை உலகுக்கு விளக்கும் சர்வதேச மொபைல் மாநாடு ஸ்பெயினில் தொடங்கியுள்ளது.

உலகில் ஸ்மார்ட்போன் ஆர்வலர்களின் பார்வை தற்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் குவிந்துள்ளது. அங்கு நடைபெறும் அதிநவீன மொபைல் போன்களின் ‌கண்காட்சிதான் இதற்குக் காரணம். 5ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களும், ஹைப்பர் கனெக்டிவிட்டி எனப்படும் பலமுனை தகவல் தொடர்பும் இந்தாண்டு கண்காட்சியில் முக்கிய அம்சங்களாக திகழ்கின்றன. சீனாவின் ஹுவெய் நிறுவனம் மேட் எக்ஸ் என்ற பெயரில் மடிக்க கூடிய அதிநவீன ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் விலையுள்ள இந்த 5 ‌ஜி போன் இந்தாண்டு இறுதியில் சந்தைகளுக்கு வர உள்ளது. உலகின் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனாக கருதப்படும். இது 1 கிகாபைட் அளவுள்ள திரைப்படத்தை வெறும் 3 விநாடிகளில் பதிவிறக்கம் செய்யும் வல்லமை படைத்ததாகும். இந்த போனின் திரையை உருவாக்குவதற்காக மட்டும் தங்கள் இன்ஜினியர்கள் 3 ஆண்டுகள் உழைத்ததாக ஹுவெயின் உயதிரிகாரியான ரிச்சர்ட் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்போன் உலகில் கோலோச்சும் சாம்சங், கடந்த வாரம்தான் ஒன்றரை லட்சம் ரூபாய் விலையுள்ள மடிக்க கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில் அதற்கு சவாலாக ஹுவெயும் களமிறங்கியுள்ளது. உலக ஸ்மார்ட்போன் சந்தையில் 4வது இடத்தில் இருக்கும் சியோமி எம்ஐ மிக்ஸ் 3 என்ற பெயரில் முதல் 5ஜி போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

தென் கொரியாவின் எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் G8 thinQ என்ற பெயரில் ஒரே நேரத்தில் இரட்டைத் திரை 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஒரு திரையில் படம் பார்த்துக்கொண்டே மறு திரையில் இணையதளத்தை பயன்படுத்த முடியும். பின்னடைவிலிருந்து மீண்டு வந்துகொ‌ண்டிருக்கும் நோக்கியா நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக 5 கேமரா கொண்ட போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 

5ஜி போன்களே தொலைத்தொடர்பு உலகின் அடுத்த நகர்வாக பார்க்கப்படும் நிலையில் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்திய அரசும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. எனவே புதிய 5ஜி போன்கள் ஓரிரு ஆண்டுகளில் இந்திய சந்தைகளில் விற்பனையாகும் என எதிர்பார்க்கலாம்.