டெக்

விண்வெளி செல்லும் பெண் ரோபோ ‘வியோ மித்ரா’

விண்வெளி செல்லும் பெண் ரோபோ ‘வியோ மித்ரா’

jagadeesh

விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள பெண் ரோபோவை இஸ்ரோ தலைவர் சிவன் அறிமுகப்படுத்தியுள்ளார். மனிதர்களுக்கு முன் ரோபோவை அனுப்ப காரணம் என்ன? மற்றும் அதன் சிறப்பம்சங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தை நிறைவேற்ற இஸ்ரோ தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. முதல் கட்டமாக ரோபோவை விண்ணுக்கு அனுப்பி பரிசோதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர், விண்வெளி வீரர்களை அனுப்ப உள்ளனர். விண்வெளிக்கு செல்வதற்காக விமானப்படையை சேர்ந்த 4 வீரர்கள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இம்மாத இறுதியில் இருந்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இஸ்ரோவின் ககன்யான் திட்டம் குறித்த 3 நாட்கள் கருத்தரங்கு பெங்களூருவில் தொடங்கி உள்ளது. கருத்தரங்கை தொடங்கி வைத்த இஸ்ரோ தலைவர் சிவன், விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் முன்னோட்டமாக விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள வியோ மித்ரா ரோபோவை அறிமுகம் செய்துவைத்தார். அப்போது ரோபோவும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு ஆங்கிலத்தில் பேசியது.

வியோ மித்ரா இந்த ஆண்டு இறுதிக்குள் ஆளில்லா விண்கலம் மூலம் விண்ணுக்கு பறக்கவுள்ளதாகவும் புதிய தலைமுறையிடம் சிவன் தெரிவித்தார். விண்வெளியில் ஏற்படும் பிரச்னைகளை உணர்ந்து உடனுக்குடன் விஞ்ஞானிகளுக்கு ரோபோ மித்ரா தெரிவுப்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். விண்வெளி வீரர்களுடன் உரையாடும் திறன்கொண்ட மித்ரா மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் என்‌றார் சிவன்.

மனிதர்களை போலவே உடலமைப்பு மற்றும் செயல்திறன் கொண்ட ஹுயூமனாய்டு ரோபோவான வியோ மித்ரா, மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்பட்டதாகும். வியோ மித்ரா ரோபோ கடந்த 2017-ஆம் ஆண்டு ஐதரபாத்தில் நடைபெற்ற உலகத் தொழில்முனைவோர் ‌மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளின் கலவையே வியோ மித்ரா. வியோமா என்பதற்கு விண்வெளி என்றும், மித்ரா என்பதற்கு தோழி என்றும் பொருளாகும்.