ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஷுக்கர்பர்க் மறைமுகமாக டிக் டாக்கை கவனித்து வருவதாகவும் அதற்காக அவர் ஒரு கணக்கை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் ஃபேஸ்புக்கிற்கு கடும் போட்டியாக இருந்து வருகிறது டிக் டாக். இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் டிக் டாக் கணக்குகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் மட்டுமல்லாது ஃபேஸ்புக், இண்ஸ்டாகிராமுக்கு நேரடி போட்டியாக டிக் டாக் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஷுக்கர்பர்க் மறைமுகமாக டிக் டாக்கை கவனித்து வருவதாகவும் அதற்காக அவர் ஒரு கணக்கை வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து BuzzFeedNews செய்தி வெளியிட்டுள்ள செய்தியின்படி, @finkd என்ற பெயரில் டிக் டாக் கணக்கை மார்க் பயன்படுத்துவதாகவும், இதே பெயரில் தான் மார்க் ட்விட்டரும் பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளது. இந்த கணக்கை 4055 பேர் பின் தொடர்கின்றனர். ஆனால் அந்தக்கணக்கு மூலம் இதுவரை எந்த வீடியோவும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அந்தக்கணக்கு 61 பிரபலங்களை பின் தொடர்ந்தும் வருகிறது.
கடந்த 2016ம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க், மியூசிக்கலி நிறுவனருடன் நிறுவனங்களை இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பின்னர் 2017ம் ஆண்டு சீனாவின் நிறுவனம் மியூசிக்கலியை வாங்கி டிக் டாக் என அப்டேட் செய்தது. உலகளவில் 800 மில்லியன் டிக் டாக் கணக்குகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் கணக்குகள்.
டிக் டாக் போன்ற லாசோ என்ற செயலியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் டிக் டாக் செயலியையே அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.