சூரிய கிரஹணம் கூகுள்
டெக்

சூரியகிரகணத்தை 50 ஆயிரம் அடி உயரத்தில் ஆய்வு செய்யும் அமெரிக்க விஞ்ஞானிகள்! அப்படி என்ன ஸ்பெஷல்?

”இந்த சூரிய கிரகணத்தை பொதுமக்கள் காண்பதற்கு வசதியாக கனடாவின் மாண்ட்ரியல் மாகாணத்தில் ஒரே சமயத்தில் 1.50 லட்சம் மக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

Jayashree A

அமெரிக்காவில் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 8ம் தேதி அன்று முழு சூரியகிரஹணம் தோன்ற இருக்கிறது. இதை வரவேற்க அங்கிருக்கும் விஞ்ஞானிகளும், பொதுமக்களும் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் இந்த சூரியகிரஹணத்தில் ஒரு சிறப்பு உண்டு .

பூமி, சந்திரன், சூரியன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது.

சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும் சில இடங்களில் முழுதாக சூரிய கிரகணம் தோன்றும். சில இடங்களில் பகுதி கிரகணமாகவும், சில இடங்களில் நெருப்பு வளைய சூரிய கிரகணமாகவும் தோன்றும்.

நாளை வட அமெரிக்கா முழுவதும் முழு சூரிய கிரகணம் நிகழும். சுமார் 3.1 கோடி மக்களால் அதை கண்டுகளிக்க முடியும். அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவின் பெரும்பகுதியிலும் இதை பார்க்க முடியும். மேலும் இந்த நிகழ்வை கண்டுகளிப்பதற்காக பெரும் எண்ணிக்கையில் மக்கள் அங்கு பயணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் தெரியாது.

மேலும், அமெரிக்காவின் நாசா இந்த சூரியகிரகணத்தின் போது வெளிப்படும் கரோணாவை ஆய்வு செய்வதற்கு WB-57 என்ற ஜெட் விமானத்தை 50,000 அடிகள் உயரத்திற்கு அனுப்புகிறது. அதில் அமர்ந்தபடி 3 விஞ்ஞானி குழுக்கள் கரோணாவை ஆய்வு செய்வார்களாம்.

முதலில் கரோணா என்றால் என்ன என்பதை பார்க்கலாம்.

முழு சூரிய கிரகணத்தின் போது, சந்திரனானது சூரியனின் பிரகாசமுகத்தை முழுமையாக மறைக்கும். அப்பொழுது சூரியனின் மறைந்த உள்பகுதியிலிருந்து மிகவும் மங்கலான ஒளி தோன்றும் இதுதான் கரோணா. சூரியனின் இந்த மர்மமான கரோணாவை ஆய்வு செய்வதற்காக விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.

கிரஹணம்

இதற்காக நாசா WB-57 என்ற ஜெட் விமானத்தை 50,000 அடிகள் உயரத்திற்கு அனுப்புகிறது. அப்பொழுதுதான் சூரியனின் முழு கிரகணத்தையும் விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யமுடியும். இதன்படி விஞ்ஞானிகள் மூன்று குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்ய தயாராக உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இரண்டு குழுக்கள் சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தையும், மற்றொரு குழுவினர் கொரோனா மற்றும் பூமியின் வளிமண்டலத்தின் மேல் மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்ட அடுக்கு அயனி மண்டலத்தை அளவிடும் என்றும் சொல்லப்படுகிறது.

இவர்களின் ஆராய்ச்சியின் பயனானது கரோனாவின் அமைப்பு மற்றும் வெப்பநிலை, பூமியின் வளிமண்டலத்தில் சூரியனின் விளைவுகள் ஆகியவற்றை நன்கு புரிந்து கொள்ளவும், மேலும் சூரியனுக்கு அருகில் சுற்றும் சிறுகோள்களைத் தேடுவதற்கும் உதவும் என்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் சூரியகிரஹணம் வருகிறது இந்த வருடம் மட்டும் என்ன ஸ்பெஷல் என்பவர்களின் கேள்விக்கு விளக்கம் அளிக்கிறார் Dr.விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி, Postdoctoral researcher, Trottier Space Institute at McGill, Montreal Canada .

Dr.விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி,

”ஏப்ரல் 8 அன்று தோன்றும் சூரியகிரகணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் 2024-2025 வருடத்தை நாங்கள் சோலார் சைக்கிள் என்று அழைக்கின்றோம்.

11 வருடத்திற்கு ஒருமுறை சூரியனின் சக்தியானது அதிகரித்துக் காணப்படும். அதாவது சூரியனிலிருந்து வரும் வெப்ப கதிர்களின் தாக்கமானது வலுவானதாக இருக்கும். இந்த சமயத்தில் சூரியனை தொலைநோக்கியின் வாயிலாகவோ அல்லது சூரிய வடிகட்டிகளின் மூலம் பார்க்கும் பொழுது அதில் சில கரும்புள்ளிகள் தென்படும் இதை விஞ்ஞானிகள் star parts என்கின்றனர்.

இந்த star parts ஐ ஆய்வு செய்வதற்காகவும் இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலமும், நாசாவின் பார்க்கர் சோலார் ப்ராப் (Parker Solar Probe) அனுப்பப்பட்டுள்ளது. இவை சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்களை ஆய்வு செய்வதுடன் அது பூமிக்கு எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் ஆராயும். சூரிய அலைகள் அதிகரிக்கும்பொழுது பூமியில் இருக்கும் எலட்ரானிக் மின் சாதனங்கள் பழுதுபட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனாலும் அத்தகைய சக்தியுடன் சூரிய அலைகள் வீசுமா? அல்லது இதனால் பாதிப்பு ஏதும் ஏற்படாதா? என்பது குறித்து விஞ்ஞானிகளின் உண்மையான தகவல் வெளிவரும் வரை மக்கள் பயப்படதேவையில்லை” என்றும் கூறுகிறார்.

”இந்த சூரிய கிரகணனத்தை பொதுமக்கள் காண்பதற்கு வசதியாக கனடாவின் மாண்ட்ரியல் மாகாணத்தில் ஒரே சமயத்தில் 1.50 லட்சம் மக்கள் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார்.