தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த மேலூர் இரட்டை சகோதர மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் இரட்டை சகோதரர்களான பாலசந்தர் மற்றும் பாலகுமார் இருவரும் இணைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பகுதிகளில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் வரும்போது இதுகுறித்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு அவசரகால வாகனங்கள் போக்குவரத்து இடையூறு உள்ள பகுதிகளை எளிதில் கடந்து செல்லும் வகையில் இந்த தொழில் நுட்பத்தை வடிவமைத்துள்ளனர்,
மாணவர்களின் இந்த புதிய கண்டுபிடிப்பு குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. அதனை கண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "மதுரை - மேலூரைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் பாலச்சந்தர், பாலகுமார் ஆகியோர், ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி விரைந்து செல்ல தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளது பாராட்டுக்குரியது. சகோதரர்கள் இருவரது உன்னத கண்டுபிடிப்புகள் தொடர எனது வாழ்த்துக்கள்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சரின் இந்த வாழ்த்து குறித்து மாணவர்களான பாலச்சந்தர் மற்றும் பாலகுமார் தெரிவிக்கும்போது...
முதல்வரின் இந்த வாழ்த்து மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. மேலும் இதுபோன்ற பல புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த புது உத்வேகத்தை அளித்துள்ளது. மேலும் எங்களது கண்டுபிடிப்பு குறித்து செய்தி வெளியிட்டு முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற புதியதலைமுறைக்கு நன்றி என அப்போது மாணவர்கள் இருவரும் தெரிவித்தனர்.