National Science Day Twitter
டெக்

National Science Day | “மாற்றங்கள் என்பது அறிவியலின் அவசியம்” - த.வி.வெங்கடேஸ்வரன்

“இந்த தேசிய அறிவியல் தினத்தில் சான்றுகள் மற்றும் தர்க்கத்தின் அடிப்படையில் விஷயங்களை அலசி ஆராய்ந்து எது ஏற்றுக்கொள்ளத்தக்கது, எது வெறும் கண்முடித்தனமான மூடநம்பிக்கை என்பதை பிரித்து அறியக்கூடிய பகுத்தறிவை பெற நாம் முயற்சிக்க வேண்டும்”

Jayashree A
சர்.சி.வி.ராமனின் அறிவியல் கண்டுபிடிப்பான ‘ராமன் விளைவு’ வெளியானதையொட்டி பிப்ரவரி 28ம் தேதியான இன்று, தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளை கொண்டாடும் வகையில் விஞ்ஞானியும் முதுநிலை அறிவியலாளருமான த.வி.வெங்கடேஸ்வரன் (விகியான் பிரசார், டெல்லி) சர் சிவி ராமனைப் பற்றியும் இத்தினத்தை பற்றியும் நம்மோடு சில அறிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவற்றை காணலாம்....

த.வி.வெங்கடேஸ்வரன்

“1928 பிப்ரவரி மாதம் 29ம் தேதி கல்கத்தாவில் வெளியான state wind என்ற பத்திரிகை ராமனின் அறிவியல் கண்டுபிடிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட்டது. உலகுக்கு ராமன் விளைவை குறித்து முதன் முதலில் அறிவிக்கப்பட்டது பிப்ரவரி 29தான். அது லீப் வருடத்தில் மட்டுமே வரக்கூடிய நாள் என்பதால், பிப்ரவரி 28ம் தேதி என்று தேதியை மாற்றி ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28-ஐ தேசிய அறிவியல் நாளாக கொண்டாடுகிறோம் நாம்.

ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட போது சர் சி.வி.ராமன் கல்கத்தா பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தார். ஆயினும், கல்கத்தா பல்கலைகழகத்தில் அறிவியல் ஆய்வை மேற்கொள்வதில் எந்தவித வாய்ப்பும் வசதியும் அவருக்கு இருக்கவில்லை.

இந்தியர்கள் அறிவியல் தொழில்நுட்ப ஆய்வை செய்வதற்கான மனநிலையும் மதிநுட்பமும் பெற்றவர்கள் அல்ல என்று காலணிய ஆட்சியாளர்கள் கருதினர். அதன் காரணமாக அன்றைய காலகட்டத்தில் இயங்கிய பல்வேறு பல்கலைகழகங்களும் வெறும் பட்டம் படிப்பதற்கும் தேர்வு நடத்துவதற்குமாக மட்டுமே இருந்தது.

சர் சிவி ராமன்

பல்கலைகழகங்களில் ஆய்வுகள் செய்வதற்கான எந்த ஏற்பாட்டையும் காலணி அரசு ஏற்படுத்தி தரவில்லை. இதையறிந்த மகேந்திரலால் சர்க்கார் என்று சொல்லக்கூடிய ஒரு விடுதலை வீரர் மக்களிடமிருந்து நிதியை திரட்டி தனது சொந்தப்பணத்தையும் போட்டு Indian association for cultivation of science என்ற ஆய்வு நிறுவனத்தை நிறுவினார்.

அந்த நிறுவனத்தில் இந்தியர்கள் அறிவியல் ஆய்வினை மேற்கொள்ளலாம் என்று அறிவித்து அனைவரையும் வரவேற்றார். அந்த ஆய்வு நிறுவனத்தில்தான் சிவி ராமன் தன்னுடைய ஆய்வை மேற்கொள்ள முடிந்தது. அதில்தான் நோபல் பரிசு பெற்ற கண்டுபிடிப்பும் நடந்தது.

‘பண்டைய இந்திய அறிவியலும் எதிர்கால அறிவியல் வளர்ச்சியும்’ என்ற கருத்தை முன்வைத்து தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட வேண்டும்.

இந்த கருத்தின் அடிப்படையை நாம் சிந்தித்தோம் என்றால் அறிவியல் பார்வையோடு கூடிய பகுத்தறிவான பார்வை நம் பண்டைய அறிவியலில் இருந்ததை நாம் காண முடியும்.

National Science Day

“மாற்றங்கள் என்பது அறிவியலின் அவசியம்” - அறிவியல் பார்வையோடு கூடிய பகுத்தறிவான பார்வை

வேதங்களில், இதிகாசங்களில் பூமி தட்டை என்று கூறி இருந்தாலும், புராணங்களிலும்கூட ‘தட்டையான பூமியின் நடுவே இருக்கும் மேரு மலையைதான் சூரியன் சுற்றி வருகிறது’ என்று கூறப்பட்டாலும், அவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் ஆதாரம் என்ன என்று தேடினார் ஆரியப்பட்டா. அப்படி அவர் தேடியபோதுதான் பூமியின் வடிவம் கோள வடிவம் என்று அவருக்கு சொல்லப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் பூமி அச்சில் தன்னை தானே சுழல்கின்றது என்பதையும் முதன் முதலில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் பார்வையோடு கண்டுபிடித்தவர் ஆரியபட்டா.

ஆரியப்பட்டா

தவிர உற்று நோக்களின் வழியில் வானத்தில் விண்மீன்கள், வான் பொருட்கள் போன்றவை நகர்வதையும் அவர் கவனித்தார். பல்வேறு கிரகங்கள் எந்த வேகத்தில் நகர்கின்றது என்பதையும் கணித்து, எதிர்காலத்தில் அதன் நிலை என்னவாக இருக்கும் என்பதை கணிக்கக்கூடிய பட்டியல்களை தயார் செய்தார். ஆனால் பல நூறு ஆண்டுகள் கடந்த பின்னர் அவருடைய கணிப்பும் உண்மைக்கும் இடையே பிழை ஏற்பட்டது.

ஆரியபட்டாவின் கணிப்பிற்கும் நடப்பிற்கும் இடையே இடைவெளி உள்ளதை கண்டவர் 1400 ஆவது ஆண்டு கேரளாவில் வாழ்ந்த நீலகண்ட சோமயாஜி என்ற வானவியலாளர். அந்த பிழையை திருத்துவதற்கான முயற்சி மேற்கொண்டு திருக்கணிதம் என்ற ஒரு புது காந்தத்தை உருவாக்கினார்.

ஆரியபட்டா

நீலகண்ட சோமையாஜி காலத்தில் ஆரியப்பட்டாவின் கருத்துக்கள் ‘அவை கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல; கடவுள் அவருக்கு அருளியவை. அதை மாற்றுவதற்கு மனிதராகிய உங்களுக்கு எந்த வித அதிகாரமும் இல்லை’ என்று ஒரு சிலர் சாடினார்கள். அவைகளை மறுத்து “மாற்றங்கள் என்பது அறிவியலின் அவசியம், நாம் உற்று நோக்குதல் வேண்டும், சான்றுகளின் அடிப்படையில்தான் அறிவியலை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார் நீலகண்ட சோமையாஜி.

பகுத்தறிவும், அறிவியலும்

இப்படியாக நமது வரலாற்று பாரம்பரியத்தில் பார்த்தால் பகுத்தறிவோடு அறிவியல் சிந்தனையுடன் செயல்படக்கூடியவர்கள் ஒரு பக்கம், கண்மூடித்தனமாக பழமையை ஏற்றுக் கொள்ளக்கூடியவர்கள் இன்னொரு பக்கம் என இரு பக்கங்களையும் நாம் காணலாம். ‘எதிர்கால வளர்ச்சிக்கு பண்டைய அறிவியல்’ என பார்க்கும் பொழுது அறிவியல் பார்வையும் பகுத்தறிவும் நம்முடைய பாரம்பரியத்திலேயே உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் நாம். இனியும் அதையே முன்னெடுத்தல் அவசியம். அப்போதுதான் எதிர்கால வளர்ச்சிக்கு நாம் வித்திட முடியும்.

National Science Day

இந்த தேசிய அறிவியல் தினத்தில்...

ஆக இந்த தேசிய அறிவியல் தினத்தில் சான்றுகள் மற்றும் தர்க்கத்தின் அடிப்படையில் விஷயங்களை அலசி ஆராய்ந்து எது ஏற்றுக்கொள்ளத்தக்கது, எது வெறும் கண்முடித்தனமான மூடநம்பிக்கை என்பதை பிரித்து அறியக்கூடிய பகுத்தறிவை பெற நாம் முயற்சிக்க வேண்டும்“ என்றார் விஞ்ஞானியும் முதுநிலை அறிவியலாளருமான த.வி.வெங்கடேஸ்வரன்.