பாலக்ன் 9 ராக்கெட் Space x
டெக்

விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோள்.. எலான் மஸ்க்கின் ராக்கெட்டை தேர்வு செய்தது ஏன்?

ஜிசாட்-N2 செயற்கைகோளானது இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டமைப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட நவீன செயற்கைக்கோள் ஆகும். இந்த செயற்கைக்கோள், நாடு முழுவதும் பிராட்பேண்ட் சேவைகள் மற்றும் விமானப் பயணத்தில் இண்டர்நெட் சேவை ஆகியவற்றை அதிகரிக்கும்.

Jayashree A

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா உருவாக்கிய GSAT-N2 என்ற செயற்கைக்கோளை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவின் கேப் கனவெரல் ஸ்பேஸ் போர்ஸ் ஏவுதளத்தில் இருந்து ஸ்பைஸ் எக்ஸ்-ன் பிரபலமான பாலக்ன் 9 ராக்கெட் வாயிலாக விண்ணில் ஏவியது.

ஏன் இஸ்ரோ ஸ்பேஸ் எக்ஸின் ராக்கெட்டை பயன்படுத்தியது? அதற்கான காரணம் என்ன என்பதைப்பார்க்கலாம்.

இஸ்ரோ சாதாரணமாக 4 டன் வரையிலான செயற்கைக்கோள்களைத் தனது சொந்த ராக்கெட் வாயிலாகவே விண்வெளியில் செலுத்தும், ஆனால் 4 டன்களுக்கு அதிகமாகச் சுமை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கு ஐரோப்பாவின் ஏரியன் ராக்கெட்டுகளை பயன்படுத்தும். அந்த வகையில் இஸ்ரோவின் இந்த இரண்டு செயற்கைக்கோளும் 4 டன்களைத் தாண்டிய எடையில் இருந்ததால், ஏரியன்ஸ்பேஸின் ராக்கெட்டுகளை உபயோகப்படுத்த எண்ணியிருந்தது.

ஆனால், தற்போது ஏரியன்ஸ்பேஸில் இஸ்ரோவின் செயற்கைக்கோள்-ஐ விண்ணில் செலுத்தப் பொருத்தமான ஏவு வாகனங்கள் அதாவது லான்ச் வெஹிக்கல் இல்லாததால், மாற்று நிறுவனத்தைத் தேட வேண்டிய கட்டாயம் இஸ்ரோவுக்கு உருவானது.

அதன்படி, இஸ்ரோவின் கவனம் விண்வெளித்துறையில் சாதித்து வரும் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மீது திரும்பியது. உலகிலேயே மறுபயன்பாடு செய்யக்கூடிய ராக்கெட்டுகளை உருவாக்குவதில் பெயர்போன ஸ்பேஸ் எக்ஸ்-ன் ஃபால்கன் 9 ராக்கெட் ஆனது, 8.3 டன் வரையிலான எடையை சுமந்துகொண்டு விண்வெளியில் செலுத்தும் திறன் கொண்டது. இதனால், 4,700 கிலோ எடையுள்ள ஜிசாட்-என்2 செயற்கைக்கோளுக்கு பொருத்தமானதாக இந்த ராக்கெட் இருந்தது.

ஃபால்கன் 9 ஏவுவதற்கான ஸ்லாட்டும் இஸ்ரோவுக்கு கிடைத்த காரணத்தால் ஏரியன்ஸ்பேஸ்-க்காக காத்திருக்காமல் இஸ்ரோ தனது செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.

ஜிசாட்-என்2 செயற்கைகோளின் பயன்பாடு என்ன?

ஜிசாட்-என்2 செயற்கைகோளானது இந்தியாவின் தொலைத்தொடர்பு கட்டமைப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட நவீன செயற்கைக்கோள் ஆகும். 48 ஜிபிபிஎஸ் தரவு பரிமாற்ற திறன் கொண்ட இந்த செயற்கைக்கோள், நாடு முழுவதும் பிராட்பேண்ட் சேவைகள் மற்றும் விமானப் பயணத்தில் இண்டர்நெட் சேவை ஆகியவற்றை அதிகரிக்கும். மேலும், அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு இந்த செயற்கைக்கோள் முக்கிய பங்கு வகிக்கும்.

விண்வெளி ஆராய்ச்சியில், நாசாவுடன் இந்தியா நீண்டகால உறவில் இருந்தாலும், முதல் முறையாக இஸ்ரோவின் கிளை நிறுவனமான NewSpace India Limited ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து பணியாற்றியுள்ளது பேசுப்பொருளாகி உள்ளது.