இஸ்ரோ அண்மையில் ஜி.எஸ்.எல்.வி. எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட் 6 ஏ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. வெற்றிகரமாக
விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் செயற்கைக்கோள் குறித்த எந்தத் தகவலும் வரவில்லை. மேலும் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு நிலை குறித்துத் தெரியாத நிலை தொடர்கிறது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து
ஜி.எஸ்.எல்.வி.-எப்08 ராக்கெட் மூலம் ஜிசாட்-6ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் மார்ச் 29-ஆம் தேதி ஏவப்பட்டு, வெற்றிகரமாகத்திட்டமிட்ட தாற்காலிக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அதன் பிறகு, செயற்கைக்கோள் இறுதிக்கட்ட சுற்றுவட்டப் பாதையை அடைவதற்கான முதல்நிலை நகர்வை கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர். இதற்காக செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள திரவ அபோஜி மோட்டாரை (எல்.ஏ.எம்) இயக்கி, முதல் நகர்வை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். பின்னர் விண்ணில் செயற்கைக்கோளின் இரண்டாம் நிலை நகர்வை சனிக்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
இதனையடுத்து இறுதிக்கட்டமான மூன்றாம் நிலை நகர்வை ஞாயிற்றுக்கிழமை விஞ்ஞானிகள் மேற்கொள்ள இருந்த நிலையில்,
செயற்கைக்கோளிலிருந்து எந்தவொரு சிக்னலும் வராததால், அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, செயற்கைக்கோளுடனான தொடர்பை மீண்டும் மீட்பதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக இஸ்ரோ சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இரு தினங்கள் முடிந்துவிட்ட நிலையிலும், செயற்கைக்கோளுடனான தொடர்பை விஞ்ஞானிகள் மீட்டதற்கான தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனவே, ரூ 270 கோடி செலவில் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் உயிர் பெறுமா அல்லது கடலில் கரைக்கப்பட்ட பெருங்காயம் ஆகுமா என்பதனை இஸ்ரோதான் கூற வேண்டும்.