இஸ்ரோ அனுப்பும் சாட்டிலைட் புதியதலைமுறை
டெக்

பள்ளி மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்கள்; நாளை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ...!

Jayashree A

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நாளை காலை 9.17 மணிக்கு SSLV-D3 என்ற சோதனை ராக்கெட்டை விண்ணில் ஏவ இருக்கிறது. இந்த ராக்கெட்டில் மூன்று செயற்கைகோள்கள் அனுப்பப்படுகின்றன.

முன்னதாக SSLV-D1 என்ற ராக்கெட், மைக்ரோசாட் 2A மற்றும் AzaadiSAT ஆகிய 2 செயற்கைக் கோள்களைச் சுமந்துகொண்டு கடந்த ஆகஸ்ட் 7, 2022 அன்று ஏவப்பட்டது. எதிர்பாராவிதமாக அதன் தரைக் கட்டுப்பாட்டு சென்சார் செயலிழந்ததால் அந்த செயற்கைக்கோள் தோல்வியடைந்தது.

SSLV-D1

இதையடுத்து இரண்டாவதாக, SSLV-D2 என்ற ராக்கெட் கடந்த பிப்ரவரி 10, 2023 அன்று விண்ணில் ஏவப்பட்டது. இது ஜானஸ்-1, AzaadiSAT-2 மற்றும் EOS-07 ஆகிய செயற்கைக்கோள்களை பூமிக்கு மேலே 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

SSLV-D2

இதைத்தொடர்ந்து நாளை ஏவப்படும் SSLV-D3யானது, EOS-08 என்ற செயற்கைக்கோள் மற்றும் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய SR-0 DemoSAT எனப் பெயரிடப்பட்ட இரண்டு செயற்கைகோள்கள் என மூன்று செயற்கைக் கோள்களுடன் விண்ணுக்கு செல்ல உள்ளது. இவை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட தயார்நிலையில் இருக்கிறது.

நாளை அனுப்பப்படும் செயற்கைகோளில் என்ன ஸ்பெஷல்....?

இது மூன்று செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. அவை குறித்து விரிவாக பார்க்கலாம்....

SSLV-D3

EOS-08 என்ற சாட்டிலைட்:

இதை மைக்ரோசாட் 2c என்றும் சொல்வார்கள். இதன் எடை 175.5 கி.கிராம். இந்த செயற்கைகோளானது

  • கடலில் வீசும் காற்றின் வேகம்,

  • நிலத்தில் இருக்கும் ஈரப்பதம்,

  • பனிமூடிய பகுதிகளை அளவீடு செய்தல்,

  • வெள்ளம் நீர் நிலைகளை ஆய்வு செய்தல்,

  • தாவரங்களின் வளர்ச்சி (பயோமாஸ் எஸ்டிமேஷன்)

ஆகியவற்றை கண்காணிக்க அனுப்பப்படுகிறது. மேலும் இதில் இருக்கும் அகசிவப்பு கதிர் கருவியானது, காட்டுத்தீ, எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்கள் ஏன் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சி செய்வதற்கு பயன்படுகிறது.

SR-0 சாட்டிலைட்

இதில் இரண்டு செயற்கை கோள்கள் இருக்கின்றன. இதற்கு ஸ்பேஸ் ரிக்‌ஷா என்று பெயரிட்டுள்ளனர் (SR-0) விஞ்ஞானிகள். இதன் எடை வெறும் 0.560 கிராம் மட்டுமே. இதை தயாரித்தது Space kids. அதாவது விண்வெளி ஆய்விலுள்ள குழந்தைகள். இந்தக் குழந்தைகள், SRM public school மற்றும் AVS அகாடமியை சேர்ந்த மாணவ மாணவிகள். இவர்கள் இணைந்து தயாரித்த இந்த ஸ்பேஸ் ரிக்‌ஷாவில் இரண்டு பேலோட் இருக்கின்றன. அவை

  1. லோரா (மெசேஜிங் ஸிஸ்டம்).

  2. பின்டயோ டோஸிமீட்டர் (அளவீடு கருவி)

பள்ளி மாணவர்கள் தயாரித்த செயற்கைக்கோளை இஸ்ரோ நாளை விண்ணில் ஏவ உள்ள நிலையில், அது வெற்றிப்பெற்றால் உலகமே இந்தியாவை திரும்பிப்பார்க்கும்! எனவே விஞ்ஞானிகளை போலவே நாமும் இதில் ஆர்வமுடன் இருக்கிறோம்!