ஒரே ராக்கெட்டில் 103 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பி உலக சாதனையைப் படைக்கும் முயற்சியில் இஸ்ரோ களமிறங்கியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் மூலம் விண்வெளியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. அந்த வகையில், பி.எஸ்.எல்.வி சி-37 என்ற ராக்கெட் மூலம் 103 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட்டில், நானோ வகை செயற்கை கோள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி சி-37 ராக்கெட்டில் வானிலையை துல்லியமாக கணிக்கும் கார்டூசாட்–2டி செயற்கைக்கோளும் இணைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1994–ம் ஆண்டு முதல் 2016–ம் ஆண்டு வரை இஸ்ரோ பல்வேறு ராக்கெட்டுகள் மூலம் 121 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி இருக்கிறது.
இந்நிலையில், முதன்முறையாக ஒரே ராக்கெட் மூலம் 103 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த செயற்கைக்கோள் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது.