சந்திரயான் 3 புதியதலைமுறை
டெக்

குறைந்த செலவில் விண்வெளியில் சாதனை படைக்கும் இஸ்ரோ.. உலக நாடுகள் உற்றுநோக்கும் காரணம் என்ன?

விண்வெளித்துறையில் வெற்றிநடைப்போடும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா,ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவும் உள்ளது.

Jayashree A

விண்வெளித்துறையில் வெற்றிநடைப்போடும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவும் உள்ளது. ஆனால் விண்வெளி துறைக்கான செலவினங்கள் என்று பார்த்தால் மற்ற நாடுகளை ஒப்பீடு செய்கையில் இந்தியா மிகக்குறைந்த அளவே செலவு செய்து வருகிறது.

உதாரணத்திற்கு 75 மில்லியன் டாலர் செலவில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்3 செயற்கைக்கோளை வெற்றிகரமாக நிலவின் தென் துருவப்பகுதியில் தரையிறக்கி உலகை திரும்பிப் பார்க்க வைத்தனர். அதேசமயம் நமக்கு போட்டியாக ரஷ்யா 133 மில்லியன் டாலர் செலவில் லூனா35 என்ற விண்கலத்தை நிலவிற்கு அனுப்பியது. ஆனால், அது சந்திரனின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது.

இது மட்டுமல்லாமல், செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ 74 மில்லியன் செலவில் மங்கள்யான் விண்கலத்தை அனுப்பியது. இது நாசாவை ஒப்பிடுகையில் மிகமிக குறைந்த செலவாகும். இப்படி மிகக்குறைந்த செலவில் திட்டமிட்டப்படி இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்வெளித்துறையில் சாதித்துவருவதை உலகநாடுகள் உற்றுநோக்கி வருகிறது.

மங்கள்யான்

இந்நிலையில், சமீபத்தில் இந்தியா, இஸ்ரோ விஞ்ஞானிகளின் அடுத்தகட்ட விண்வெளி திட்டங்களுக்காக $1.55 பில்லியன் (இந்திய மதிப்பில் 227 பில்லியன்) டாலரை ஒதுக்கியுள்ளது.

அதென்ன அடுத்தகட்டம் ? அதாவது, இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களின் அடுத்தகட்ட நகர்வான வியாழன் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக விண்கலம் ஒன்றை அனுப்பவும், விண்வெளி நிலையத்தை அமைக்கவும், அதிக எடைக்கொண்ட விண்கலத்தை சுமந்து செல்லும் மற்றும் மறு பயன்பாட்டுக்கு உதவக்கூடிய அதிநவீன ராக்கெட்டை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

குறைந்த செலவில் விண்வெளித்துறையில் சாதித்து வரும் இஸ்ரோ விஞ்ஞானிகளை திட்டமிட்டப்படி தங்களது ஆராய்சியை வெற்றிகரமாக செயல்படுத்தினால், விண்வெளிதுறையில் இந்தியா முதன்மைப்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

இஸ்ரோவின் இத்தகைய பணிகள் மிகவும் குறைந்த செலவில் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, அதன் தொழில்நுட்பம். இஸ்ரோ தங்களுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தையும் இந்தியாவிலேயே தயாரித்துக்கொள்கின்றனர். ஆனால், மற்ற நாடுகள் தங்களின் செயற்கைக்கோள் உற்பத்தியை தனியார் நிறுவனங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்கிறது. இதனால் செலவுகள் அதிகரிக்கிறது.

சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல்1

மேலும், மற்ற நாட்டு விஞ்ஞானிகளை விட இஸ்ரோ விஞ்ஞானிகள் குறைந்த ஊதியத்தில், சிறந்த சேவையை செய்வதால், இந்தியாவானது விண்வெளித்துறையில் சாதிக்கமுடிகிறது. உதாரணத்திற்கு செலவைக்குறைக்கும் பொருட்டு 1960கள் மற்றும் 70 களில் இஸ்ரோ விஞ்ஞானிகள், மாட்டு வண்டிகளிலும் மிதிவண்டிகளின் உதவியால் செயற்கைக்கோளை எடுத்துச்செல்லும் புகைப்படமே இதற்கு சிறந்த சான்றாகும்.