இந்தியர்களின் வாட்ஸ் அப் பயன்பாடு உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் பதிலளிக்க வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. வீடியோ, போட்டோ, கோப்புகள் என பல முக்கிய விஷயங்கள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுகிறது. அதனால் வாட்ஸ் அப்பின் பாதுகாப்பு அம்சங்களில் அந்நிறுவனம் மிகுந்த கவனம் கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த மே மாதம் வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயற்சிப்பதாகவும் உடனடியாக அனைவரும் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்ய வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேலைச் சேர்ந்த உளவு அமைப்புடன் தொடர்புடைய என்எஸ்ஓ நிறுவனத்தின் ‘பிகாசுஸ்’ என்ற ஸ்பைவேர் ஊடுருவலுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டது. இது குறித்து வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அறிவிப்புகளை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியது. பின்னர் பிரச்னை சரிசெய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில் வாட்ஸ் அப் ஸ்பைவேர் மூலம் இந்தியாவின் முக்கிய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என 1400 பேர் கண்காணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு தகவல்கள் தெரிவித்துள்ளார்.. ஆனால் அவர் யார் பெயரையும் குறிப்பிட்டு கூறவில்லை.
ஆனால் இந்த புகாரை இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இந்நிலையில் இந்தியர்களின் வாட்ஸ் அப் பயன்பாடு உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் பதிலளிக்க வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நவம்பர் 4-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது