ஐபோன் 15 சீரிஸ் முகநூல்
டெக்

'Make in India' ஐபோன் 15 சீரிஸ் விற்பனை இன்று முதல் இந்தியாவில்...!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் விற்பனை இன்று முதல் இந்தியாவில் தொடங்கியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

சிறியவர் முதல் பெரியவர் வரை தங்களின் கைகளில் தொலைப்பேசி இல்லாமல் இருப்பதில்லை. செல்போன் இல்லாமல் உணவு உண்ண தயங்கும் குழந்தையில் துவங்கி இப்பொழுதெல்லாம் தங்களது பொழுதுபோக்கை சமையல் குறிப்பு, வெப் சீரிஸ் என்று செல்போனிலேயே கழிக்கும் பெரியவர்கள் வரை தனக்கென தனித்துவமான ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளன மொபைல் போன்கள்.

ஐபோன் 15 சீரிஸ்

பெரும்பான்மையான இளைஞர்களுக்கு ‘எப்படியாச்சும் ஐபோன் வாங்கிறணும்டா’ என்ற கனவும் இருக்கின்றது. அந்தளவுக்கு ஐபோன்கள் தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளன. இப்படியான ஐபோன் நிறுவனமானது நாளுக்கு நாள் ஐபோன் சீரிஸை அடுக்கி கொண்டும் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பெருக்கி கொண்டும் செல்கிறது.

இதில் இன்றுமுதல் இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் ஐபோன் 15 சீரிஸ் விற்பனையை தொடங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் தயார் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

அதிகாலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து ‘மேக் இன் இந்தியா’ ஆப்பிள் செல்போனை வாங்கி சென்றனர்.

டெல்லியில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் அதிகாலை 4 மணியில் இருந்தே காத்திருந்த ராகுல் என்பவர், முதல் வாடிக்கையாளராக ஐபோனை வாங்கி சென்றார்.

டெல்லி போலவே மும்பை பிகேசி என்ற இடத்தில் அமைந்துள்ள ஆப்பிள் ஸ்டோருக்கு வெளியே ஐபோன் 15 சீரிஸை வாங்குவதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் அதிகாலை முதலே காத்துகிடந்தனர்.

அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில் , "ஐபோன் 15 சீரிஸை வாங்குவதற்காக அகமதாபாத்திலிருந்து வந்துள்ளேன். இதற்காக நேற்று மதியம் 3 மணி முதல் நான் இங்கு காத்திருக்கிறேன். இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரிலிருந்து முதல் ஐபோனைப் பெறுவதற்காக கிட்டத்தட்ட 17 மணிநேரமாக வரிசையில் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பெங்களூரைச் சேர்ந்த விவேக் என்ற வாடிக்கையாளர் கூறுகையில், “புதிய ஐபோன் 15 ப்ரோவைப் வாங்குவதில் நான் முகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மேலும் அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பயனர் கூறுகையில், “நான் ஐபோனை வாங்குவதற்கு நேற்று விமானம் மூலமாக இங்கு வந்தேன். காலையில் இருந்து கிட்டதட்ட 5-6 மணி நேரமாக இங்கே நிற்கிறேன்” என்றார்.