ஐபோன் பிரியர்கள் பெரிதும் எதிர்பார்த்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஐபோன் -14 சீரிஸ் மாடல்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கலந்து கொண்டு புதிய ரக ஐபோன்களை அறிமுகம் செய்து வைத்தார். அதன்படி, ஐபோன் 14, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 மேக்ஸ், ஐபோன் ப்ரோ மேக்ஸ், ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச், ஏர் பாட்ஸ் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் வரும் 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரவுள்ளன. ஐபோன் 14 -ன் ஆரம்ப விலை 79,900 ரூபாயாக இருக்கும். ஐபோன் 14 பிளஸ் மாடலின் ஆரம்ப விலை 89 ஆயிரத்து 900 ரூபாயாக இருக்கும். ஐபோன் 14 ப்ரோ மாடல் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்கப்படவுள்ளது. ஐபோன் ப்ரோ மேக்ஸ் மாடல் சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
சிறப்பம்சங்கள்:
1. ஆப்பிள் ஐபோன் 13இல் இடம்பெற்றுள்ள அதே A15 பயோனிக் சிப் கொண்டு வெளியாகியுள்ளது ஐபோன் 14. ஆனால் அதன் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் காரணமாக முந்தைய மாடலை விட 18% வேகமான திறனோடு ஐபோன் 14 வேலை செய்யும் என்று ஆப்பிள் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.IP68 வாட்டர் ரெஸிஸ்டண்ட் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி அனைத்து ஐபோன் 14 சீரிஸ் மொபைல்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
3. இந்த ஐபோன் சீரிஸிலும் ஆப்பிள் நிறுவனம் டூயல் இ-சிம் வசதியையே தனது பயனர்களுக்கு பரிசளித்து இருக்கிறது.
4. விபத்து அறிவிப்பு வசதியும் (Crash Detection) இந்த சீரிஸில் அறிமுகமாகி உள்ளது.
5. 30 நிமிடத்தில் 50% சார்ஜிங் ஆகும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.