கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதியன்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) சார்பில் Global Fintech Fest (GFF) 2024 நிகழ்ச்சியானது மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது யுபிஐ பரிவர்த்தனைகளை இன்னும் எளிதாக்கும் வகையிலான பல்வேறு புதிய முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதில் மக்களை பெரிதும் கவரும் ஒரு அம்சமாக, UPI-ICD எனப்படும் ஏடிஎம் கார்டு இல்லாமல் யுபிஐ மூலம் ஏடிஎம்களில் பணத்தை அனுப்பும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய அம்சமானது பயனர்கள் பணம் அனுப்ப ஏடிஎம் செல்லும்போது உடல்ரீதியான டெபிட் கார்டு முதலிய எந்தவிதமான கார்டுகளை எடுத்துச்செல்லும் தேவையை நீக்கியுள்ளது. இந்த அம்சத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தும் வங்கியாக ஆக்ஸிஸ் பேங்க் அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அம்சம் DM எனப்படும் பணம் போடும் மற்றும் பெறும் அனைத்து டெபாசிட் மெசின்களிலும் இடம்பெற உள்ளது.
இந்நிலையில் கூடுதலாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் UPI Circle எனப்படும் இன்னொரு அம்சத்தையும் NPCI அறிமுகப்படுத்தியுள்ளது. அது என்ன யுபிஐ சர்க்கிள் என்றால் உங்கள் யுபிஐ அக்கவுண்ட்டை பயன்படுத்தி நீங்கள் இல்லாமலே உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பணம் செலுத்த உதவும் அம்சமாக இடம்பெற்றுள்ளது.
UPI Circle அம்சம் என்பது ஒரே யுபிஐ அக்கவுண்ட்டில் ஒரு நபரை முதன்மை பயனராகவும், அவர்களின் நம்பகமான குடும்ப உறுப்பினர்களை இரண்டாம் நிலை பயனராகவும் இருக்க அனுமதிக்கிறது. அதன்படி, நீங்கள் இல்லாமலேயே உங்கள் யுபிஐ அக்கவுண்ட்டை பயன்படுத்தி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பணத்தை செலுத்த முடியும். இதில் குறிப்பிட்ட பணபரிவர்த்தனை வரம்புகளையும் உங்களால் வைத்துக்கொள்ள முடியும்.
இதனால் உங்கள் அப்பா, அம்மா, மனைவி, மகன், மகளிடம் கையில் பணத்தை கொடுக்காமல், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் பேமெண்ட் செய்யும் வரம்புகளை நீங்களே கையாள முடியும். இது உங்கள் குடும்பத்தினர் யாரிடமும் ஆன்லைன் பேமெண்ட் மோசடியில் சிக்கிக்கொள்ளாமல் தடுக்கவும் உதவுகிறது.
இதை இரண்டு முறையில் நீங்கள் பராமரிக்கலாம், “ஒவ்வொரு பரிவர்த்தனையையும் அனுமதியுங்கள் அல்லது குறிப்பிட்ட அளவிலான பரிவர்த்தனையை மட்டும் அனுமதியுங்கள்” என்ற இரண்டு முறைகளில் உங்கள் இரண்டாம் நிலை பயனரை நீங்கள் இணைத்துக்கொள்ளலாம்.