டெக்

“கடைசியாக எப்போது அழுதீர்கள்?” - கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் உருக்கமான பதில்

“கடைசியாக எப்போது அழுதீர்கள்?” - கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சையின் உருக்கமான பதில்

நிவேதா ஜெகராஜா

அமேசானின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து சமீபத்தில் விலகிய ஜெஃப் பெஸோசை கண்டு பொறாமைப்படுவதாக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

ஜெஃப் பெஸோஸ், வரும் ஜூலை 20 ம் தேதி தனது சகோதரருடன் விண்வெளிக்கு பயணப்பட இருப்பதாக கூறியிருந்ததை தொடர்ந்து தனது இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் சுந்தர் பிச்சை. 11 நிமிட பயணமான அது, பயணிகளை பூமியிலிருந்து 62 மைல் மேல்நோக்கி விண்வெளிக்கு அழைத்துச்செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. தானும் விண்வெளியிலிருந்து அப்படி பூமியை பார்க்க விரும்புவதாக கூறியுள்ளார் சுந்தர் பிச்சை.

பிபிசியுடனான அந்த நேர்காணலில், “நீங்கள் கடைசியாக எப்போது அழுதீர்கள்?” எனக்கேட்டதற்கு “உலகம் முழுவதும் கொரோனாவால் இறந்தவர்களை சுமந்துக்கொண்டு செல்லும் வண்டிகளை பார்த்தபோது மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்தியாவில் கடந்த மாதத்தில் அப்படி நிறைய நிகழ்வுகளை பார்த்தேன். அப்போது அழுதேன்” எனக்கூறினார்.

மேலும் பேசும்போது சமூகவலைதளத்தில் சீனாவில் இருப்பது போன்று கட்டுப்பாடுகள் நிறைந்த இணைய சேவை அதிகரித்து வருகிறதா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இணைய சுதந்திரம் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக கூறினார். சீனாவில் கூகுள் தயாரிப்புகள் எதுவும் கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.