டெக்

பெகாசஸ் என்ற இணைய ஆயுதம் - உலகத்தின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்குகிறதா ஸ்பைவேர்?

பெகாசஸ் என்ற இணைய ஆயுதம் - உலகத்தின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்குகிறதா ஸ்பைவேர்?

Veeramani

உலக நாடுகளின் பாதுகாப்பையும், இறையாண்மையையும் கேள்விக்குறியாக்கும் வகையிலான பெகாசஸ் ஸ்பைவேர் புகார் குறித்து இந்தியாவிலும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சைபர் வல்லுநர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். எதிரி நாடுகளும் உளவு பார்க்க இந்த ஸ்பைவேரை பயன்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

பெகாசஸ் என்ற ஒற்றைச்சொல் உலக நாடுகள் கவலையுடன் நோக்கும் விஷயமாகிவிட்டது. இந்தியாவில் ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சியினர் உட்பட 300க்கும் அதிகமானோரை பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் உளவு பார்த்ததாக எழுந்துள்ள சர்ச்சை, விவாதத்துக்குரியதாகி, கண்டனத்துக்குரியதாகி இருக்கிறது. பெகாசஸ் போன்ற "சைபர் வெப்பன்", அதாவது இணையதள ஆயுதத்தை வாங்கும்திறன் தனிநபர்களுக்கு கிடையாது என்கிறார்கள் இணையதள வல்லுநர்கள்.

ஒரு நாட்டில் உள்ளவர்களை உளவு பார்க்க, மற்றொரு நாட்டில் இருந்து ஒரு ஸ்பைவேர் உருவாகி பயன்பாட்டுக்கு வருகிறதென்றால், அந்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் அச்சம் நிலவுகிறது. எந்த லிங்க் மூலமும் இயக்க நேரிடாமல் ஒரு செல்போன் அழைப்பு மூலமே ஸ்பைவேரை செலுத்தி உளவு பார்க்கமுடியும் என்பது ஆபத்தானது என எச்சரிக்கும் வல்லுநர்கள், இந்திய அரசு இதுபற்றி விசாரணைக்கு உத்தரவிடவேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்துகிறார்கள்.

போர் ஆயுதங்களை விற்கும் இஸ்ரேலில், இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மூலமாக ஒரு தாக்குதலையோ அல்லது ஒற்றறிதலையோ ஒரு நிறுவனத்தின் மூலம் செய்ய முடியும் எனில் இந்தியா மட்டுமின்றி எந்த நாட்டுக்குமான பாதுகாப்புக்கும் இது அச்சுறுத்தலே என்பது இணையக் குற்ற தடுப்பு வல்லுநர்களின் உச்சபட்ச எச்சரிக்கையாக இருக்கிறது. ஸ்பைவேர் மூலம் அறியப்படும் தகவல்களை எதிரிநாடுகளும் பயன்படுத்திக்கொள்ளமுடியும் என்பதால் இணையப் பயன்பாட்டு வழிகளிலும், போர்முனைக்கான எச்சரிக்கையும் அவசியமாகிறது.