INSAT 3DS  Twitter
டெக்

வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறியும் INSAT - 3DS செயற்கைக்கோள் - இன்று விண்ணில் பாய்கிறது

வானிலை மாற்றத்தை துல்லியமாகக் கண்டறியும் 25 வகையான கருவிகளுடன் வடிவமைக்கப்பட்ட இன்சாட்-3டிஎஸ் அதிநவீன செயற்கைக்கோள் இன்று மாலை 5.35 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

webteam

செய்தியாளர்: பால வெற்றிவேல்

வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் ‘இன்சாட்’ வகை செயற்கை கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வானிலை ஆய்வுக்காக, இன்சாட் - 3டிஎஸ் எனும் அதிநவீன செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

‘இன்சாட்-3டிஎஸ்’

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி - எப்14 ராக்கெட் மூலம் இன்று மாலை 5.35 மணிக்கு இந்த செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு பணி நிறைவு பெற்று, திரவ எரிபொருள் நிரப்பும் பணிகள் முடிவுற்றன. மேலும் இதற்கான 27.30 மணி நேரம் கவுன்ட்டவுன் நேற்று பிற்பகல் 2.05 மணிக்கு திட்டமிட்டபடி துவங்கியது.

இன்சாட் - 3டிஎஸ் என பெயரிடபட்ட இந்த செயற்கைக் கோள் 2,275 கிலோ எடையுடன் 6 சேனல் இமேஜர் உட்பட 25 விதமான ஆய்வு கருவிகள் பொருத்தபட்டுள்ளன, இவை புவியின் பருவநிலை மாறுபாடுகளை உன்னிப்பாக கண்காணித்து வானிலை தொடர்பான தகவல்களை துல்லியமாக நிகழ் நேரத்தில் வழங்கும். இதன்மூலம் புயல், கனமழை போன்ற இயற்கை பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே அறிந்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

INSAT 3DS

ஏற்கெனவே விண்ணில் செயல்பாட்டில் உள்ள இன்சாட் - 3டி மற்றும் 3டிஆர் செயற்கைக் கோள்களின் தொடர்ச்சியாக, இந்த இன்சாட் - 3டிஎஸ் மேம்படுத்தப்பட்ட கருவிகளுடன் விண்ணில் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தானியங்கி தரவு சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து வானிலை, நீரியல் மற்றும் கடல்சார் தரவுகளைப் பெறுவது மற்றும் வானிலை முன்னறிவிப்பு திறன்களை மேம்படுத்துவது இந்த செயற்கை கோளில் பொருத்தப்பட்ட கருவிகளின் செயல்பாடாக இருக்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புவி அறிவியல் அமைச்சகத்தின் (MOES) பல்வேறு துறைகளான இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD), மத்திய-தர வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் (NCMRWF), இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (IITM), தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT), இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மையம் (NICOIS) மற்றும் பல்வேறு பிற நிறுவனங்கள் மேம்படுத்தப்பட்ட வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் வானிலை சேவைகளை வழங்க INSAT - 3DS செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தும்.

ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட் மூலமாக விண்ணில் பாயும் இந்த செயற்கைக்கோள் இஸ்ரோவின் 93 வது விண்கலமாகவும், இந்தாண்டின் இஸ்ரோவின் இரண்டாவது பணியாகவும் உள்ளது.