உலகளவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகத்தின் முன்னேற்றத்தில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
2017ஆம் ஆண்டின் பிராட்பேண்ட் மற்றும் மொபைல் இன்டர்நெட் சேவை தொடர்பாக, ஊக்லா ஸ்பீடெஸ்ட் க்ளோபல் இண்டெக்ஸ் என்ற சேவை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகளவில் வேகமான பிராட்பேண்ட் இண்டர்நெட் வழங்குவதில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில், இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. அத்துடன் 2017ல் மட்டும் நம்பமுடியாத அளவிற்கு இந்திய பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகத்தின் அளவு 76.9% உயர்ந்துள்ளது. இந்தியாவிற்கு அடுத்தப்படியாக இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் சீனா மற்றும் அமெரிக்கா உள்ளது. சீனா 42.3%, அமெரிக்கா 37.3% உயர்ந்துள்ளது.
இதுமட்டுமின்றி மொபைல் டேட்டா பதிவிறக்கம் செய்யும் வேகத்தின் முன்னேற்றத்தில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அத்துடன் இந்தியாவின் முன்னேற்றம் 42.2% ஆக உள்ளது. இதில் 56% முன்னேற்றத்துடன் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. மேலும் 2017ஆம் ஆண்டில் மட்டும் உலகின் மொத்த பிராட்பேண்ட் இன்டர்நெட் வேகம் 30%, மொபைல் பதிவிறக்கம் 30.1%, மொபைல் பதிவேற்றம் 38.9% உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த ஆய்வின் படி உலகளவில் பிராட்பேண்ட் வேகத்தில் இந்தியா 109 இடத்திலும், மொபைல் இன்டர்நெட் வேகத்தில் 76 இடத்திலும் உள்ளது.