வந்தாச்சு உலகின் முதல் TRIPLE FOLDABLE ஸ்மார்ட்ஃபோன். ஏற்கெனவே ஆண்டிராய்டில் இருக்கும் அப்டேட்களை வைத்து , ' புதுசு கண்ணா புதுசு' என ஆப்பிள் 16 சீரிஸ் மொபைல் என பில்ட் அப் செய்துகொண்டிருக்க, ' இதைத்தான் ராத்திரி பூராம் ஒட்டினியாக்கும்' என தூள் பட விவேக்கை டீல் செய்யும் பரவை முனியம்மா கணக்காக, தன் அடுத்த மொபைலை கெத்தாக வெளியிட்டிருக்கிறது Huawei நிறுவனம்
' மூக்கு பொடைப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்கத்தோணும் ' டைப்பில் Huawei நிறுவனம் ஏற்கெனவே WATCH Buds என்னும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்திருந்தது. அதாவது அந்த வாட்சைத்திறந்தால் உள்ளே ஈயர்பட்ஸ் இருக்கும். அதை வைத்து ஜாலியாக பாடல்கள் கேட்க முடியும். ஈயர்பட்ஸை சார்ஜ் செய்ய வாட்சையே சார்ஜிங் கேஸாக பயன்படுத்த முடியும். இதை எப்படி Huawei நிறுவனம் சாத்தியப்படுத்தியது என போட்டி நிறுவனங்கள் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்க அடுத்த சிக்ஸரை பூமிக்கு வெளியே அடித்திருக்கிறது அந்த நிறுவனம்.
சோனியில் சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த வகை ஃபோல்டபிள் மொபைல்களுக்கான ப்ரோட்டோடைப் வெளியாகியிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் ஃபோல்டபிள் மொபைல் வெளியிடும் நிறுவனம் சாம்சங் மட்டும் தான். ஒன் பிளஸ் போன்ற நிறுவனங்களிலும் ஃபோல்டபிள் மொபைல்கள் உண்டு. அதாவது 6 இன்ச் அளவில் இருக்கும் மொபைலை விரித்தால் ஒரு குட்டி டேப்லெட் போல் இந்த மாடல் மொபைல்கள் விரிந்துகொள்ளும். அவற்றை வைத்து வீடியோக்கள் பார்ப்பது, மீட்டிங் நோட்ஸ் எடுப்பது போன்ற டாஸ்குகளை செய்ய முடியும். தற்போது இதன் அடுத்த வெர்சனை வெளியிட்டிருக்கிறது ஹூவே.
இந்த Mate XT Ultimate Design மொபைலை இரண்டாக விரித்தால் 7.9 இன்ச் ஸ்கிரீனாக மாறும். மீண்டும் விரித்தால் 10.2 இன்ச் அளவில் டேப்லெட்டாக உருமாறிவிடும். இரண்டாக மூன்றாக தேவைக்கேற்ப நாம் இதை விரித்துக்கொள்ளலாம். தற்போதைக்கு சீனாவில் மட்டுமே இந்த மாடலை விற்பனை செய்யவிருக்கிறார்களாம். இந்திய மதிப்பில் இந்த மொபைலின் ஆரம்ப விலை கிட்டத்தட்ட 2 லட்சம்.