Universe Model Image
டெக்

அறிவோம் அறிவியல் 1 | பிரபஞ்சம், கேலக்ஸி, சூப்பர் நோவா உருவானது எப்படி? சுவாரஸ்ய தகவல்கள்...!

Jayashree A

சமீபகாலமாக விண்வெளியைப் பற்றிய அறிய தகவல்கள் பல வந்துகொண்டே இருக்கின்றன. அதன்மூலம் இந்த பிரபஞ்சத்தைப் பற்றியோ, கேலக்ஸியைப் பற்றியோ நமக்குள் எழும் சந்தேகங்கள் எண்ணற்றவை. ஆகவே, பிரபஞ்சம் உருவானதில் இருந்து, அதன்பின் எப்படி கேலக்ஸிகள் உருவாகின என்பதில் தொடங்கி, நட்சத்திரங்கள் - கோள்கள் என பல்வேறு விஷயங்களை நாங்கள் உங்களுக்கு விவரிக்கப் போகிறோம்.

அவற்றை நீங்கள் தெளிவாக புரிந்துக்கொள்ளும் வகையில், அறிவியல் ஆய்வாளர்கள் சொல்லும் தகவல்களை வாரம்தோறும் நாம் பார்க்கலாம்.

அதன்படி இந்த வாரம்... பிரபஞ்சம் என்றால் என்ன என்பதையும் பிரபஞ்சத்தையொட்டி உள்ள சில முக்கிய விஷயங்கள் குறித்தும் பார்க்கலாம்.
பிரபஞ்சம்

பிரபஞ்சம்

பிரபஞ்சம் என்பது விண்மீன் திரள்கள், நட்சத்திரங்கள், கிரகங்கள், சிறுகோள்கள், விண்கற்கள் மற்றும் விண்வெளியில் உள்ள அனைத்து கூறுகளையும் கொண்டது. சுருக்கமாக சொல்லப்போனால், நாம் உணரக்கூடிய அனைத்துமே, இந்த பிரபஞ்சத்துக்குள்தான் வரும். இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது விடைதெரியா மில்லியன் டாலர் கேள்விதான். பிரபஞ்சம் தோன்றியது எப்படி? என்று இன்றளவும் விஞ்ஞானிகள் ஆய்வுகள் பல நடத்தி வருகின்றனர்.

அவர்களின் கணிப்புப்படி, ஒரு பெரிய வெடிப்பின் (Big Bang Theory) முடிவில் உருவானதுதான் பிரபஞ்சம். Big Bang கோட்பாடு, பிரபஞ்சம் சுமார் 13.7 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கூறுகிறது. இதன்படி, பிரபஞ்சம் ஒரு சூடான பந்தைக் கொண்டிருந்தது. இந்த பந்தில், ஒரு வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்பு ‘பிக் பேங் வெடிப்பு’ என்று அழைக்கப்பட்டது. அதன் பின்னரே பிரபஞ்சம் தோன்றி இருக்கலாம்

Big Bang Theory

பிரபஞ்சத்தில் பல கேலக்ஸிகள் இருக்கின்றன. அந்த கேலக்ஸிகளுக்குள், விண்மீன்கள் - நட்சத்திர குடும்பங்கள் எல்லாம் இருக்கும். அப்படியொரு கேலக்ஸ்க்குள்தான் நமது பூமி அமைந்திருக்கும் சூரிய குடும்பமும் இருக்கிறது. அது சரி, கேலக்ஸி என்றால் என்ன?

கேலக்ஸி

பிரபஞ்சம் எனும் பெரும்ம்ம்ம்ம் வெளியில், நட்சத்திரக் கூட்டங்கள் சேர்ந்து இருப்பதை நாம் கேலக்ஸி என்று சொல்கிறோம். இந்த பிரபஞ்சத்தில் எண்ணற்ற ‘நட்சத்திர கூட்டங்கள்’ உள்ளன என்பதால், எண்ணற்ற கேலக்ஸிகளும் உள்ளன. அதில் நாம் இருக்கும் கேலக்ஸி,

மில்கிவே கேலக்ஸி (எ) பால்வெளி மண்டலம்
பால்வெளி மண்டலம்

இந்த, மில்கிவே கேலக்ஸியில் எண்ணற்ற நட்சத்திரங்கள் உள்ளன. உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால் சூரியன் ஒரு நட்சத்திரம், அதே போல் அருந்ததி, திருவாதிரை என்று பெயரிடப்பட்ட நட்சத்திரங்கள், கூடவே பெயரிடப்படாத எண்ணற்ற நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நட்சத்திரங்களை சுற்றி எண்ணற்ற கோள்களும் உண்டு.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கோள்களின் எண்ணிக்கை

அறிவியல் ஆய்வாளர்கள் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் ஆராய்ந்து கோள்களை கண்டுபிடித்து வருகின்றனர். அதன்படி மில்கி வேயில் கிட்டத்தட்ட 5000 திலிருந்து, 6000 வரை கோள்களை கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றனர். ஆனால், பூமியைப்போன்ற ஒரு கோள் (உயிரினங்கள் வாழும்) இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.

சூரிய குடும்பம்

சூரிய குடும்பம்

இதில் நம்முடையது சூரிய குடும்பம். இந்த சூரிய நட்சத்திரத்தைச் சுற்றி 9 கோள்கள் சுற்றி வருகின்றன. இந்த 9 கோள்களை துணைக்கோள்கள் சுற்றிவருகின்றன. இவை அனைத்தையும் சேர்த்து, சூரிய குடும்பம் என்கிறோம்.

இந்த சூரிய குடும்பத்தில் பூமியை சுற்றுகின்ற துணைக்கோள் சந்திரன். இந்த சந்திரனைப்போல ஒவ்வொரு கோள்களுக்கும் பல சந்திரன்கள் உண்டு. ஜூப்பிட்டரில் மட்டும் 63 சந்திரன்கள் உண்டு என்பது சுவாரஸ்யமான விஷயம்.

மற்றொரு கேலக்ஸி

andromeda galaxy

மில்கிவே கேலக்ஸிக்கு அடுத்ததாக Andromeda galaxy என்று ஒன்று உள்ளது. இது பூமியிலிருந்து 2.5 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. அதிலும் எண்ணெற்ற கோள்களும் விண்மீன்களும் (நட்சத்திரங்கள்) உள்ளன.

நட்சத்திரங்களின் முடிவு

சூரியனை ஒத்த விண்மீன்கள் தங்களுக்குள் இருக்கும் எரிபொருளை எரித்து முடிக்கும் வரையில் ஒளிர்ந்துக்கொண்டு இருக்கும். அதில் உள்ள எரிப்பொருள்கள் முற்றிலும் தீர்ந்துவிட்டால் வெள்ளை குள்ளனாகவோ அல்லது சூப்பர் நோவாக்களாகவோ மாறும்.

இன்னும் சில சுவாரஸ்ய தகவல்களை, அடுத்த அத்தியாத்தில் சொல்கிறோம்...

தொடரின் பிற அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...