டெக்

சந்திரயான்-2 விண்கலத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும்..!

சந்திரயான்-2 விண்கலத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கும்..!

Rasus

விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம், சந்திரயான் -2 விண்கலம் இன்று பிற்பகல் 2.43 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சுமார் 44 மீட்டர் உயரமும், 4 மீட்டர் சுற்றளவுடன் 3 நிலைகளைக் கொண்டது மார்க்-3 ராக்கெட். விண்ணில் ஏவப்படும்போது, ராக்கெட் வேகத்தை அதிகரிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள இரு STRAP-ON மோட்டார்கள், அதன் பணியை முடித்த பிறகு முதலில் பிரியும்.

அதைத்தொடர்ந்து ராக்கெட்டின், இரண்டாவது நிலையான L100 பணி தொடங்கும். இது ராக்கெட்டின் வேகத்தை மேலும் அதிகரிக்கும். பின்னர் C25 எனப்படும் மூன்றாவது நிலை அதன் பணியைத் தொடங்கும். அதன்பின்னர் 3-வது நிலை ‌ராக்கெட்டிலிருந்து சந்திரயான்-2 விண்கலம்‌பிரிந்து, இயங்கத் தொ‌டங்கும். நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்குவதற்காக, சந்திரயான்-2 விண்கலம், பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றத் தொடங்கும்.

ஒரு கல்லை வெகுதூரம் எறிவதற்கு, அதன் முனையில் ஒரு கயிற்றைக் கட்டி, பல முறை வேகமாக சுற்றி, திடீரென்று விடும்போது அது வெகுதூரம் செல்லும். கிட்டத்தட்ட அதே தொழில்நுட்ப‌த்தின் கீழ்தான் சந்திரயான்-2 ஆர்பிட்டருடன் இணைந்து பூமியை வேகமாகச் சுற்றிவரும். அதாவது பூமியின் நீள்வட்டப் பாதையிலிருந்து விலகி நிலவை நோக்கி தனது பயணத்தை தொட‌ங்கும்.

சந்திரனை நோக்கி நெருங்கிய பிறகு, அங்கு உடனடியாக சந்திரயான்-2 இறங்காது. பூமியைச் சுற்றி வந்ததுபோன்று‌ நிலவையும் சந்திரயான்-2 சுற்றி வரும்.பின்னர் ஆர்‌பிட்டரிலிருந்து சந்திரயான்-2 மட்டும் பிரிந்து, நிலவைச்‌ சுற்றத் தொடங்கும். தொடர்ந்து, சரியான இடத்தை தேர்வு செய்து, சந்திரயான்-2 நிலவில் இறங்கும். நிலவில் இறங்கும் சந்திரயான்-2க்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. இறங்கியவுடன் அது பூமிக்கு தனது சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கும். நிலவில் இறங்கிய பிறகு, விக்ரம் கலத்தில் பொருத்தப்பட்டுள்ள ரோவர் எனப்படும் 6 சக்கர வண்டியான பிரக்யான், நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று, அதன் தன்மையை ஆய்வு செய்து தகவல்களை பூமிக்கு அனுப்பும்