இ.ஆர்.எஸ். ட்விட்டர்
டெக்

விண்ணில் செயலிழந்த செயற்கைக்கோள்.. பூமியில் விழப்போகும் பாகங்கள்.. எச்சரிக்கும் ஐரோப்பா விஞ்ஞானிகள்!

செயற்கைகோளின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் அபாயம் உள்ளதாக ஐரோப்பா விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Prakash J

கடந்த 1990ஆம் ஆண்டில் ஓசோன் படலத்தைக் கண்காணிக்கும் வகையில், ’இ.ஆர்.எஸ். கிராண்ட்பாதர்’ (‘Grandfather’ Satellite ERS-2) என்ற செயற்கைக்கோளை, ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியிருந்தது. இந்த நிலையில், அதன் ஆயுட்காலம் முடிவடைந்து தன்னுடைய சுற்றுப்பாதையைவிட்டு விலகியது. இதனால் அந்தச் செயற்கைகோளின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் அபாயம் உள்ளதாக ஐரோப்பா விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மாதம் இறுதிக்குள் அது பூமியில் விழலாம் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதனை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் எங்கு விழும் எனச் சொல்ல முடியவில்லை. இருப்பினும் ஐரோப்பாவில் உள்ள கடல்களில் விழவைக்க முயற்சிகள் நடக்கின்றன. இதன் பெருமளவிலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால் சில பாகங்கள் வளிமண்டலத்தை தாண்டி பூமியில் விழும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து விஞ்ஞானிகள், ”இரண்டு டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களில் பெரும்பாலானவை கீழே விழும்போது எரிந்து விடும். செயற்கைக்கோள்கள் பூமியை நோக்கி இறங்கும்போதும், அவை வளிமண்டலத்தில் நுழையும் போதும் ஏற்படும் கடுமையான வெப்பத்தை தாங்கக்கூடிய சில வலுவான பாகங்கள் இருக்கலாம், ஆனால் அவை மக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கும் வாய்ப்புகள் குறைவு” எனத் தெரிவித்துள்ளனர்.