டெக்

என்னை திருமணம் செய்து கொள்கிறாயா கூகுள் ? இந்தியர்கள் மீது கடுப்பான கூகுள்

என்னை திருமணம் செய்து கொள்கிறாயா கூகுள் ? இந்தியர்கள் மீது கடுப்பான கூகுள்

webteam

''நீங்கள் ஏன் கூகுள் அசிஸ்டெண்டிடம் திருமணம் செய்யச்சொல்லி கேட்கிறீர்கள்'' என்று கூகுள் இந்தியா  தனது ட்விட்டர் பக்கத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதற்கு ட்விட்டர் வாசிகள் கிண்டலான பதிலை அளித்து வருகிறார்கள்.

கூகுள் அசிஸ்டெண்ட் என்பது செல்போனுக்குள் நமக்காக உதவி செய்யும் உதவியாளர் என்று வைத்துக்கொள்ளலாம். நாம் ஒரு தரவை தேடி போய் எடுப்பதற்கு பதிலாக கூகுள் அசிஸ்டெண்டிடம் கேட்டால் அது இணையத்தில் உள்ள தரவுகளில் அடிப்படையில் உங்கள் கேள்விக்கான பதிலை அளிக்கும். இணையத்தில் உள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்டு சுமார் 70 பில்லியன் கேள்விகளுக்கு உடனடியாக பதில் சொல்லும் வகையில் இந்த கூகுள் அசிஸ்டெண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஆனால் நம் இணையவாசிகள் வழக்கம் போல் கூகுள் அசிஸ்டெண்டிடம் அவர்களது குறும்பை காட்டியுள்ளார்கள். 70 பில்லியன் கேள்விகளுக்கு பதில் வைத்திருக்கும் கூகுள் அசிஸ்டெண்டிடம் சென்று என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று புதிய கேள்வியை கேட்டுள்ளனர். நிறைய பேர் இதே கேள்வியைக்கேட்டதால் கூகுள் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கேள்வியை கேட்டுள்ளது. எங்களுக்கு உண்மையிலேயே தெரிய வேண்டும், நீங்கள் ஏன் கூகுள் அசிஸ்டெண்டிடம் திருமணம் செய்யச்சொல்லி கேட்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளது.

அதற்கு ''எங்களுக்கு தெரிய வேண்டும் கூகுள் ஏன் எப்பொழுதும் என்னுடைய லொக்கேஷனை கேட்கிறது?'' என்பது போலவும், ''ஏனென்றால் நாங்கள் சிங்கிளான 90கிட்ஸ்'' என்றும் நக்கலான பதிலை வழக்கம் போல் நம் ட்விட்டர் வாசிகள் பதிலாக அளித்து  வருகிறார்கள்.