வெளியேறும் நட்சத்திரங்கள் மாதிரி படம் புதிய தலைமுறை
டெக்

இதுவே முதல்முறை..! R136 நட்சத்திரக் கூட்டத்திலிருந்து வெளியேறிய 55 நட்சத்திரங்கள்; செல்வது எங்கே?

R136 பகுதியிலிருந்து சுமார் 55 நட்சத்திரங்கள், நட்சத்திர கூட்டத்திலிருந்து அதி வேகமாக வெளியேறுவதை கவனித்துள்ளனர். ஒரு நட்சத்திரக் கூட்டத்திலிருந்து இத்தனை நட்சத்திரங்கள் வெளியேறுவது இதுவே முதல் முறை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Jayashree A

நமது பால் வெளி அண்டத்திற்கு அருகாமையில் , சுமார் 158,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது மாகெல்லானிக் கிளவுட்டில் என்ற விண்மீன்கள் கூட்டம். இதன் மையப்பகுதியை விஞ்ஞானிகள் R136 என்று பெயரிட்டு அழைக்கின்றனர். இங்கு ஏராளமான புதிய நட்சத்திரங்கள் உருவாகி கொத்து கொத்தாக உள்ளது.

யுரோப்பாவின் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான மிட்செல் ஸ்டூப் தலைமையிலான வானியலாளர்கள், கியா( gaia) விண்வெளி தொலைநோக்கியைக்கொண்டு இந்த மாகெல்லானிக் கிளவுட் கிளஸ்டரை ஆராய்ந்து வந்தனர்.

அதில் அவர்கள் ஆச்சர்யப்படும்படி, R136 பகுதியிலிருந்து சுமார் 55 நட்சத்திரங்கள், நச்சத்திர கூட்டத்திலிருந்து அதி வேகமாக வெளியேறுவதை கவனித்துள்ளனர். ஒரு நட்சத்திரக் கூட்டத்திலிருந்து இத்தனை நட்சத்திரங்கள் வெளியேறுவது இதுவே முதல் முறை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

வெளியேற்றப்படும் இந்த நட்சத்திரங்களில் சில நமது சூரியனை விட 300 மடங்கு பெரியவை என்கிறார்கள். இந்த நட்சத்திரங்கள் கிளஸ்டரை விட்டு ஏன் வெளியேறுகிறது என்று ஆராய்கையில், அவர்களுக்கு இன்னும் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மாகெல்லானிக் கிளவுட்டில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய வெடிப்புகளில் பல புதிய நட்சத்திரங்கள் உருவாகியதால் பழைய நட்சத்திரங்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

வெளியேற்றப்படும் இந்த நட்சத்திரங்கள் சில மணிநேரத்திற்கு 62,000 மைல்களை கடந்து மிக வேகமாக செல்கிறது. இது ஒலியின் வேகத்தை விட 80 மடங்கு அதிகம். இத்தனை வேகமாக எங்கு செல்கிறது என்று பார்த்தால், அது தான் தெரியாது… அது அதன் போக்கில் வெவ்வேறு திசையை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது.

இப்படி, அவை விண்வெளியில் பயணிக்கும்போது, அதன் பாதையில் இருக்கும் புதிய நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் உருவாக்கத்தை அது பாதிக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். மேலும் அவர்கள் ஒன்றை கூறுகின்றனர். அதாவது, இந்த நட்சத்திரம் வெடித்தால் 1000 ஒளி ஆண்டுகள் தூரம் வெடித்து சிதறும் என்கிறார்கள். ஆக.. இந்த பிரபஞ்சத்தை புரிந்துக்கொள்வதற்கு விஞ்ஞானிகளுக்கு இன்னும் பல ஆய்வுகள் தேவைப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.