jupiter pt
டெக்

அறிவோம் அறிவியல் 8 | தரையே இல்லாத ’வியாழன்’ கிரகம்; ஆனால் ஹைட்ரஜனால் ஆன கடல் இருக்கு!!

Jayashree A

அறிவோம் அறிவியலில் இன்று நாம் பார்க்க இருப்பது வியாழன் கிரகத்தைப்பற்றி... இது கிரகமா என்றால் இருக்கு என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம். ஏனெனில் இங்கு தரை பரப்பு இல்லை. முற்றிலும் வாயுக்கள் திரவங்களை கொண்டிருக்கும் ஒரு கிரகம்

வியாழனின் நிறமாலை

வியாழன் கிரகத்தை ஆங்கிலத்தில் ஜூப்பிட்டர் என்று கூறுவார்கள். இது சூரிய குடும்பத்திலேயே மிக பெரியகிரகம். இதன் மேல்பகுதி சிவப்பு கலந்த வெள்ளை, ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இதுதான் நிறமா என்றால் அது நமக்கு தெரியாது. நம் கண்களைப்பொருத்தவரை 12 நிறங்கள்தான் அதைதான் மாற்றி மாற்றி நம் கண்கள் நமக்கு காட்டும். ஆக இந்த கிரகமும் பார்ப்பதற்கு சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.

இது குளிர்ச்சியான கிரகம், இதன் வளி மண்டலத்தில் அம்மோனியா மற்றும் நீரின் காற்று மேகங்கள், ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவை மிதக்கின்றன. அதன் (ஆரஞ்சு கோடுகள் ) ஆரஞ்சு பெல்ட்கள் எதிர் திசைகளில் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி சுழல்கிறது.

பூமியை விட எத்தனை அளவு பெரியது?

இது பூமியை விட பெரியது... (69,911 கிலோமீட்டர் ஆரத்தைக்கொண்டது.) எதனை பெரியது என்று சொல்லவேண்டும் என்றால்... வியாழனை ஒரு பை போன்று நினைத்துக்கொண்டால், இந்த பையில், கிட்டத்தட்ட 1000 பூமியை வைக்கமுடியுமாம். நாம் அங்கு வாழ்ந்தால் ஒரு முறை கூட நம்மால் உலகத்தை சுற்றி வர முடியாது... பாதி கண்டங்கள் எங்கே இருக்கிறது ? அவர்களின் வாழ்க்கை முறை என்ன என்பதை கூட தெரிந்துக்கொள்ள முடியாது.

அப்படி என்றால் அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என்றால் அதுதான் முடியாது என்கிறார்கள் விஞ்ஞானிகள் காரணம் வழக்கம்போலதான், கிரகவெப்பநிலை, அழுத்தம் இதெல்லாம் அதிகம். மேலும் அங்கு தரைப்பரப்போ... வாழ்வதற்கான சூழலோ இல்லை.

சுற்றுப்பாதை மற்றும் சுழற்சி

வியாழனில் ஒரு நாள் என்பது 10 மணிநேரம் மட்டுமே ... அப்படி என்றால் பெரிதாக இருந்தாலும் அது எந்த வேகத்தில் சுற்றுகிறது என்பதை எண்ணிக்கொள்ளுங்கள். ஆனால், அது சூரியனை நீள்வட்ட பாதையில் நீண்ட தூரமாக சுற்றுவருவதால், அங்கு ஒரு வருடம் என்பது 4333 நாட்கள். அதாவது நமக்கு 12 வருடம் அங்கு ஒரு வருடம் என்கிறார்கள். ஆனால் இது தலை குனியாமல் கிட்டத்தட்ட நிமிர்ந்து 3 டிகிர் சாய்ந்து சூரியனை சுற்றிவருவதால் தீவிரமான பருவ மாற்றங்களை அது கொண்டிருக்கவில்லை.

நிலவுகள்..

விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி இதற்கு மொத்தமாக 95 நிலவுகள் இருப்பதாக் கூறுகின்றனர். இதில் நான்கு பெரிய நிலவுகள் மீதமுள்ளது சிறிய நிலவுகள் . இந்த நான்கு பெரிய நிலவுக்கு - Io, Europa, Kanymede மற்றும் Callisto - என்று நமது விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலவு ஒவ்வொன்றினை பற்றியும் பின்னால் ஒரு கட்டுரையில் பார்க்கலாம்...

இந்த 4 நிலவை கலிலியன் செயற்கைக்கோள்கள் என்கிறார்கள். இதற்கு காரணம், அறிவியல் வளர்சியடையாத காலத்தில் கலிலியோ தனது கையில் உள்ள தொலைநோக்கியின் உதவியால் வியாழனில் 4 நிலவு இருப்பதாக கண்டுபிடித்தார். அதனால் இதை கலிலியோ செயற்கைக்கோள் என்று பெயரிட்டனர். அதன் பிறகு வாயோஜர் உதவியால் வியாழனில் நிறைய துணைக்கோள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மோதிரங்கள்

1979 ஆம் ஆண்டு நாசாவின் வாயேஜர் 1 விண்கலம் வியாழனின் வளையங்கள் இருப்பதை கண்டுபிடித்து சொன்னது. இந்த வளையங்கள் சிறிய, இருண்ட துகள்களால் ஆனவை, சூரியனால் ஒளிரும் போது மட்டுமே இது தெரியும்.

உருவாக்கம்

வியாழன் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி உள்ளது. அதன் பிறகு நாம் மட்டும் தனியாக சுற்ற வேண்டாம் சூரிய குடும்பத்துடன் சேர்ந்து சுற்றலாம் என்று துணைக்கோள்களுடன் சேர்ந்து சூரியனை சுற்றி வருகிறது. இதன் வேகமான சுழற்சியால் சூரிய குடும்பத்தில் உள்ள பெரும்பாலான தூசி , வாயுக்களை தன்பக்கமாக இழுத்து அதனுடன் சேர்ந்து சூரியனை சுற்றி வருகிறது.

கட்டமைப்பு

வியாழனின் சூரியனில் இருப்பதைப்போன்று ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்தை கொண்டிருக்கிறது. வளிமண்டலத்தில், அழுத்தம் மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு, ஆகியவற்றால், ஹைட்ரஜன் வாயுவை ஒரு திரவமாக மாற்றுகிறது. அதனால் வியாழனில்- தண்ணீருக்கு பதிலாக ஹைட்ரஜனால் ஆன கடல் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்,

வியாழனின் வேகமான சுழற்சியால் அதைச்சுற்றிலும் மின்னோட்டங்கள் இயக்குவதாக கருதப்படுகிறது, இதில் உள்ள திரவ உலோக ஹைட்ரஜனின் சுழற்சியானது ஒரு டைனமோ போல செயல்படுகிறது, அதனால் இது சக்திவாய்ந்த காந்தப்புலத்தை உருவாக்குகிறது.

மேற்பரப்பு

வியாழனுக்கு உண்மையான மேற்பரப்பு இல்லை. இந்த கிரகம் பெரும்பாலும் வாயுக்கள் மற்றும் திரவங்களால் சூழப்பட்டுள்ளது. அதனால் அங்கு தரைப்பரப்பு கிடையாது என்கின்றனர் விஞ்ஞானிகள். ஒரு விண்கலம் வியாழன் கிரகத்தில் தரையிறங்க நினைத்தால் அது முடியாது பறந்தபடி இருக்கவேண்டும். அதே சமயத்தில் அங்கிருக்கும் வாயுக்கள் மற்றும் தனிமங்களால் அது சேதமடையாமல் பறக்க முடியாது. கிரகத்தின் ஆழமான அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலைகளால் கிரகத்திற்குள் பறக்க முயற்சிக்கும் விண்கலங்களை அது நசுக்கி, உருகி, ஆவியாகி விடும் என்கிறார்கள்

வளிமண்டலம்

வியாழனின் தோற்றம் வண்ணமயமான கோடுகள் மற்றும் புள்ளிகள் - கிரகத்தைச் சுற்றியுள்ள மேகப் பட்டைகள் மற்றும் துருவத்திலிருந்து துருவத்திற்கு புள்ளியிடும் சூறாவளி புயல்கள். வாயு கிரகம் அதன் "வானத்தில்" மூன்று தனித்துவமான மேக அடுக்குகளைக் கொண்டுள்ளது, அவை ஒன்றாக எடுத்துக்கொண்டால், சுமார் 44 மைல்கள் (71 கிலோமீட்டர்) வரை பரவியுள்ளது. மேல் மேகம் அநேகமாக அம்மோனியா பனியால் ஆனது, அதே சமயம் நடுத்தர அடுக்கு அம்மோனியம் ஹைட்ரோசல்பைட் படிகங்களால் ஆனது. உட்புற அடுக்கு நீர் பனி மற்றும் நீராவியால் ஆனது.

வியாழன் முழுவதும் தடிமனான பட்டைகளில் நாம் காணும் தெளிவான வண்ணங்கள், கிரகத்தின் வெப்பமான உட்புறத்தில் இருக்கும் கந்தகம் மற்றும் பாஸ்பரஸ் கொண்ட வாயுக்களாக இருக்கலாம் என்கிறார்கள். இது ஒரு அனுமானம்தான்.

இப்படி விஞ்ஞானிகளுக்கு சவால்விடும் வகையில், புரியாத புதிர்களில் பல கோள்கள் பிரபஞ்சத்தில் வலம் வந்தாலும், நம் விஞ்ஞானிகள் அது குறித்து ஓரளவு தகவல்களை சேகரித்து நமக்கு பகிர்ந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொண்டு...

அடுத்த வாரம் வேறொரு கிரகத்துடன் நாமளும் வலம் வரலாம்.