டெக்

இது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி?

இது உங்கள் பாதுகாவலன்: காவலன் செயலி செயல்படுவது எப்படி?

webteam

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் தெலங்கானாவில் பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம். உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் தீக்கிரையாக்கப்பட்டது என கடந்த வார சம்பவங்கள் நாட்டையே உலுக்கியுள்ளன. இதுபோன்ற சம்பவங்கள் பெண்கள் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தைதையும், அதேவேளையில் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள தமிழக காவல்துறை பிரத்யேக செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஆபத்தை உணரும் பெண்கள், காவலன் SOS பட்டனை அழுத்தினால் போதும், அடுத்த சில நிமிடங்களில் காவல்துறை உங்கள் அருகில் இருக்கும். காவலன் SOS செயலியை எப்படி பயன்படுத்துவது?

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள GOOGLE PLAY STORE-ல் ‘KAVALAN SOS’ செயலியை பதவிறக்கம் செய்து கொள்ளலாம். செயலியை பதவிறக்கம் செய்தவுடன் அப்ளிகேஷன் ஒன்று ஓபன் ஆகும். அதில் REGISTER என ENGLISH தமிழ் என இரு மொழிகள் தெரியும். உங்கள் வசதிக்கு ஏற்ப மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். பிறகு REGISTER அல்லது ( பதிவு) பட்டனை அழுத்த வேண்டும். பிறகு ரிஜிஸ்டிரேஷன் (registration) பக்கத்தில், உங்களது போன் நம்பர், பெயர், மாற்று போன் நம்பர் கேட்கும் அதனை பதிவு செய்ய வேண்டும்.

பின் நெக்ஸ்ட் (NEXT ) பட்டனை அழுத்த வேண்டும்.அதையடுத்து உங்களது முகவரி, மின்னஞ்சல் ஆகியவற்றைப் பதிவு செய்து, சைன் அப் (sign up) என்ற பச்சை நிற பட்டனை அழுத்தினால் காவலன் செயலி பயன்படுத்தத் தயாராகி விடும். இந்த செயலியை நீங்கள் ஒருமுறை பதிவு செய்தாலே போதுமானது, எப்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். பாதுகாப்பற்ற சூழலை பெண்கள் உணரும் தருவாயில் காவலன் SOS பட்டனை அழுத்தினால் போதும், அழைக்கும் நபரின் இருப்பிடம் குறித்த தகவல் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனே சென்று விடும், அடுத்த சில நிமிடங்களிலேயே காவல்துறை ரோந்து வாகனம் அந்த பெண் இடத்திற்கு வந்து நிற்கும்.

காவலன் SOS செயலி பட்டனைத் தொட்டவுடன் உடனடியாக GPS இயங்க ஆரம்பித்து செல்போன் கேமரா தானாகவே 15 விநாடிகளில் ஒலி-ஒளியுடன் கூடிய வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டறைக்கு அனுப்பிவிடும். செல்போன் சிக்னல் கிடைக்காத இடங்களிலும் குறுஞ்செய்தி கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த காவலன் செயலியை விளையாட்டுத் தனமாக பயன்படுத்தக் கூடாது என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த செயலியை பெண்கள் மட்டுமில்லாமல், அவசர நிலையில் இருக்கும் முதியோர்கள் மற்றும் குடிமக்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பாதுகாப்புச் செயலி 24 மணி நேரமும் இயங்குவதால், தங்கள் கைபேசிகளில் பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மாநகரக் காவல் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.