டெக்

சூரிய குடும்பத்திற்கு வெளியே பறக்கும் விண்கலத்தில் பழுது; விஞ்ஞானிகள் செய்த அற்புதம்!

சூரிய குடும்பத்திற்கு வெளியே பறக்கும் விண்கலத்தில் பழுது; விஞ்ஞானிகள் செய்த அற்புதம்!

ச. முத்துகிருஷ்ணன்

சூரிய குடும்பத்திற்கு வெளியே அதாவது இண்டர்ஸ்டெல்லார் பகுதியில் பறக்கும் வாயேஜர்-1 விண்கலத்தில் ஏற்பட்ட பழுதை வெற்றிகரமாக சரிசெய்துள்ளதால், மீண்டும் வழக்கமான செயல்பாட்டு அவ்விண்கலம் திரும்பியுள்ளது.

நாசாவின் விண்கலமான வாயேஜர்-1 2012 ஆம் ஆண்டு சூரியனின் தாக்கம் முடிவடையும் எல்லையான ஹீலியோஸ்பியர் பகுதியைக் கடந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக இண்டர்ஸ்டெல்லார் பகுதியில் பயணித்து கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்விண்கலத்தில் இருந்து சில மாதங்களாக எச்சரிக்கை சமிஞைகள் பூமிக்கு வந்தன. அதன் ஆண்டெனாவை பூமியை நோக்கி வைத்திருக்கும் அணுகுமுறை கலைப்பு மற்றும் கட்டுபாடு அமைப்பு (AACS) விண்கலத்தை பற்றிய மோசமான தகவல்களை பூமிக்கு அனுப்பத் துவங்கியது.

பல மாதங்கள் பகுப்பாய்வு செய்த பிறகு, நாசா பொறியாளர்கள் வாயேஜர் 1 இலிருந்து தரவைப் பாதிக்கும் சிக்கலைத் தீர்த்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்வதை நிறுத்திவிட்டதாக அறியப்பட்ட உள் கணினி மூலம் டெலிமெட்ரி தரவை AACS அனுப்பத் தொடங்கியதுதான் சமீபத்திய பிரச்சினைக்கு காரணம் என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆய்வில் சிக்கலைக் கண்டறிந்த பிறகு, தகவல்களை அனுப்புவதற்கு 21 மணிநேரம் 45 நிமிடங்கள் 45 வினாடிகள் எடுக்கும், என்றும் பூமியிலிருந்து தரவைப் பெறுவதற்கு அதே நேரம் எடுக்கும் என்றும் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1977 ஆம் ஆண்டு 5 ஆண்டு கால ஆய்வுத்திட்டத்துடன் அனுப்பப்பட்ட வாயேஜர் 1, 45 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் சூரிய குடும்பத்திற்கு வெளியே இருந்தும் பல தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. இருப்பினும் வருங்காலத்தில் மேலும் பல சிக்கல்கள் விண்கலத்தில் ஏற்படும் என ஊகிக்கும் விஞ்ஞானிகள் தனது செயல்பாட்டை விண்கலம் நிறுத்தும்முன் மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். வேற்றுகிரக வாசிகள் நம்முடன் தொடர்பு கொள்ள ஏதுவாக இந்த விண்கலத்தில் பூமியில் உள்ள வாழ்க்கையின் படங்கள், அடிப்படை அறிவியல் கோட்பாடுகளின் வரைபடங்கள் மற்றும் இயற்கையிலிருந்து வரும் ஒலிகள், பல மொழிகளில் வாழ்த்துச் செய்திகள் மற்றும் இசை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு தங்கப் பதிவு ஒன்றும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.