Elon Musk Brain Chip Web
டெக்

மனித மூளைக்குள் மைக்ரோசிப் பொறுத்தி ஆராய்ச்சி! நரம்பியக்க நோயாளிகளை அழைக்கும் எலான் மஸ்க்!

எலான் மஸ்க்கின் நியூராலிங்க் எனப்படும் நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனமானது மனிதர்களின் மூளையில் மைக்ரோசிப் பொறுத்தி பரிசோதிக்கும் ஆராய்ச்சிக்கு ஒப்புதல் பெற்றுள்ளது.

Rishan Vengai

கடந்த 2016ஆம் ஆண்டு X (முன்னர் ட்விட்டர்) தலைமை நிர்வாகியான எலான் மஸ்க், ’நியூராலிங்க்’ எனப்படும் நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். இந்நிறுவனம் மனித எண்ணங்களை செயல்களாக மாற்றக்கூடிய மூளை மற்றும் கணினிக்கு இடைமுகமாக செயல்படக்கூடிய மைக்ரோ சிப்பை (Brain-Computer interface) உருவாக்குவதில் கவனம் செலுத்திவருகிறது.

அதாவது கணினிகள் போன்ற வெளிப்புற சாதனங்களைக் கட்டுப்படுத்தவும், இழந்த மூளை செயல்பாடுகளை மீட்டெடுக்கவும் பயன்படுத்தக்கூடிய BCI-ஐ உருவாக்குவதே நியூராலிங்க் நிறுவனத்தின் குறிக்கோளாக இருந்துவருகிறது. இதன் மூலம் உடல் பாகங்கள் செயலிழந்து போன மனிதர்கள் பயன்பெறுவார்கள் எனவும், உடல் பருமன், மன இறுக்கம், மனச்சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மனிதர்களும் பயனடைவார்கள் எனவும் நியூராலிங்க் கூறிவருகிறது.

கடந்த 2020-ம் ஆண்டு விலங்குகள் மீது பயன்படுத்தும் ஆராய்ச்சியை செய்த நீயூராலிங்க், ஒரு குரங்கின் மனதுடன் கணினி கர்சரைக் கட்டுப்படுத்தப் பயன்படும் BCI-ஐ பயன்படுத்தி வெற்றிகரமாக நிரூபித்துக்காட்டியது. அதைத்தொடர்ந்து மனிதர்களின் மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தும் ஆராய்ச்சியை செய்துவந்த நிறுவனம், தற்போது அதற்கான ஒப்புதலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.

மூளைக்குள் மைக்ரோசிப் வைப்பதற்கான நோயாளிகள் ஆள்சேர்ப்பு அறிமுகம்!

நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனமான நியூராலிங்க் கடந்த செவ்வாயன்று ஒரு அறிவிப்பை அறிவித்தது. அதில், “நரம்பியக்க அல்லது முடக்குவாத நோயாளிகளை மையமாகக் கொண்டு மனித மூளைக்குள் மைக்ரோசிப் வைத்து பரிசோதிப்பதற்காக நோயாளிகள் ஆட்சேர்ப்புக்கு ஒப்புதல் பெற்றுள்ளதாகவும், இதற்கான கால அவகாசம் 6 ஆண்டுகள் எனவும்” தெரிவித்துள்ளது.

Brain Computer Interface

இதுகுறித்து தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் நியூராலிங்க், “எங்கள் முதல்-மனித மருத்துவ பரிசோதனைக்கு ஆட்சேர்ப்பு திறக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்!. அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸ் (ALS) காரணமாக முடக்குவாதம் இருந்தால், நீங்கள் தகுதி பெறலாம்” என தெரிவித்துள்ளது.

மூளையில் மைக்ரோசிப் பொறுத்துவது என்றால் என்ன? எத்தனை வருடங்கள் தேவைப்படும்?

மக்கள் தங்கள் எண்ணங்களுடன் கணினி கர்சர் அல்லது கீபோர்டைக் கட்டுப்படுத்த மூளையில் வைக்கப்படும் மைக்ரோசிப் உதவுகிறது. ஸ்மார்ட் பிரைன் என அழைக்கப்படும் மூளைக்குள் வைக்கப்படும் BCI சிப்பானது மூளையின் மின் செயல்பாடு மற்றும் எக்ஸ்டர்னல் டிவைஸ் இரண்டையும் இணைக்கப்பயன்படுகிறது. ஒயர்லஸ் மைக்ரோசிப்பான இது மூளையின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் பகுதியில் ரோபாட் உதவியின் மூலம் பொறுத்தப்படுகிறது. BCI ஆனது மனித அறிவாற்றல் மற்றும் உணர்திறன் செயல்பாடுகளை ஆராய்ச்சி செய்தல், மேப்பிங் செய்தல், சரி செய்தல் போன்ற வேலைகளை செய்கிறது.

Brain Computer Interface

இதன் பரிசோதனைக்கான கால அவகாசம் 6 ஆண்டுகள் என அறிவித்துள்ள நியூராலிங்க் நிறுவனம், இதற்கான அனுமதியை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) இடமிருந்து பெற்றுள்ளது. மனித மூளையில் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பு மற்றும் சிக்கல் குறித்த FDA கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ள நியூராலிங்க் முழுமையான ஒப்புதலை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி ஏற்கனவே 10 நோயாளிகளுக்கு ஒப்புதல் பெறப்போவதாக நியூராலிங்க் தெரிவித்திருந்த நிலையில், அத்தனை நபர்களுக்கு FDA அனுமதிக்கவில்லை எனவும், எத்தனை மனிதர்கள் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படவிருக்கிறார்கள் என்ற முழுவிவரமும் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை என தெரிவித்துள்ளது.

ஸ்டீபன் ஹாக்கிங்கை குறிப்பிட்டு எலான் மஸ்க் போட்ட பதிவு!

நியூராலிங்கின் அறிவிப்பை தொடர்ந்து அதன் நிறுவனரான எலான் மஸ்க்கும் அடுத்தக்கட்ட பரிசோதனைக்காக நோயாளிகள் ஆட்சேர்ப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தன்னுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “முதல் மனித நோயாளி விரைவில் நியூராலிங்க் கருவியைப் பெறுவார். இது இறுதியில் உடல் இயக்கத்தை முழுவதுமாக மீட்டெடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த பரிசோதனை ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Stephen Hawking

தனது இளம்வயதிலேயே அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்களீரோசிஸால் (ALS) எனப்படும் நரம்பியக்க நோயினால் பாதிக்கப்பட்டு, கை கால் இயக்கம் மற்றும் பேச்சு போன்றவற்றை இழந்த சைண்டிஸ்ட் ஸ்டீபன் ஹாக்கிங், நவீன காலத்தில் தலைசிறந்த ஆராய்ச்சியாளராக பாராட்டபடுபவர். கன்னத்திலிருக்கும் சில தசைகள் தவிர உடல் பாகங்கள் அனைத்தும் செயலிழந்த நிலையில், ஈக்வலைஸர் என்ற கம்ப்யூட்டர் புரோக்ராம் உதவியோடு கன்னத் தசைகளின் அசைவுகள்மூலம் கம்ப்யூட்டர் குரலில் மட்டுமே ஸ்டீபன் பேசி வந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதியன்று ஸ்டீபன் ஹாக்கிங் மரணமடைந்தார்.