எலோன் மஸ்க்கின் SpaceX நிறுவனம் அதன் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டை ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏவியது.
ஸ்பேஸ்எக்ஸ் தனது 400-அடி உயர (122 மீட்டர்) ஸ்டார்ஷிப் வாகனத்தை ஐந்தாவது முறையாக அக்டோபர் 13ம் தேதியான இன்று ஏவியது. தெற்கு டெக்சாஸில் உள்ள அதன் ஸ்டார்பேஸ் தளத்தில் இருந்து காலை 8:25 மணிக்கு ராட்சத ராக்கெட்டை மேலே அனுப்பியது.
இதுவரை உருவாக்கப்பட்ட மிக சக்திவாய்ந்த ராக்கெட் ஆனது வானத்தை நோக்கி சென்றுவிட்டு மீண்டும் அதே ஏவுதளத்திற்கு திரும்பிய நிகழ்வை முதல்முறையாக SpaceX செய்துகாட்டியது. இது எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளியது.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், ஸ்டார்ஷிப் மற்றும் பொதுவான விண்வெளி ஃபிளைட்களுக்கான புதிய தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. புதிய அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் சிறந்த ஏவுதல் மற்றும் வெற்றிகரமாக திரும்புதலை நோக்கமாக கொண்ட ஸ்பேஸ்எக்ஸ், தன்னுடைய ஐந்தாவது விமான சோதனையை இன்று நிகழ்த்தியது.
ஐந்தாவது சோதனையின் போது ஸ்டார்ஷிப்பின் சூப்பர் ஹெவி என அழைக்கப்படும் மிகப்பெரிய முதல்-நிலை பூஸ்டர் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கு முன் ஏவப்பட்ட பூஸ்டர் திரும்பாத நிலையில், இந்தமுறை மிகப்பெரிய முன்னெடுப்பை ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்தியது. இந்தமுறை ஏவப்பட்ட ஏவுதளத்திற்கே திரும்பிய பூஸ்டர், ஏவுகணை கோபுரத்தில் இருந்து புறப்பட்ட அதேஇடத்தில் வந்து லேண்ட் ஆனது. ஸ்டார்ஷிப் ஆனது "சாப்ஸ்டிக்" என்ற அதன் கைகளால் பூஸ்டரை லாவகமாக பிடித்தது.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஐந்தாவது ராக்கெட் சோதனையில் 5000 மெட்ரிக் டன் எடை கொண்ட ராக்கெட்டானது புவி ஈர்ப்பு விசையை மீறி ஏவுதளத்தில் தானாக வந்திறங்கி அதிசயிக்க வைத்தது. இப்படி நிகழ்வது இதுவே முதல்முறை. இது SpaceX நிறுவனத்தின் மற்றுபயன்பாட்டு ராக்கெட் மேம்பாட்டு முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.