ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து எப்போ என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வருவார் என்று பயனர்கள் பலரும் திக் திக் மனநிலையிலேயே இருந்து வருகிறார்கள்.
ப்ளூ டிக் பெற கட்டணம் விதித்தது முதல் ட்விட்டரின் சி.இ.ஓ பதவிக்கு நாயை நியமித்ததாக அறிவித்தது வரை, எலான் மஸ்க் சர்ச்சையை கிளப்பாத நாளே இருக்காது.
அப்படித்தான் இன்று ட்விட்டரின் இலச்சினையாக (logo) இருந்த நீலக்குருவிக்கு பதிலாக மீம் க்ரியேட்டர்களால் வைரலாக்கப்படும் சீம்ஸ் (Cheems) doge-ஐ லோகோவாக மாற்றியிருக்கிறார் எலான் மஸ்க். ஜப்பான் ஷிபு இனு என்ற ஒரு நாய்தான், Dogecoin என்ற க்ரிப்டோ கரன்சியின் அடையாளமாக இருக்கும். அதிலுள்ள Doge-யின் உருவத்தைதான் ட்விட்டர் தளத்தின் லோகோவாக மஸ்க் தற்போது மாற்றியிருக்கிறார்.
ட்விட்டரின் இந்த புதிய லோகோ மொபைல் செயலியில் இன்னும் அப்டேட்டாகவில்லை. மற்றபடி டெஸ்க்டாப் போன்றவற்றில் பயன்படுத்தும் போது மட்டும் பிரதிபலிக்கிறது. லோகோ மாற்றிய விஷயத்தில் சுவாரஸ்யமும் ஒன்றுள்ளது. அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 25ம் தேதியன்று (அப்போது எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கவில்லை), “ட்விட்டர், பேச்சு சுதந்திர கொள்கையை உண்மையில் பின்பற்றுகிறதா?” என சாதாரண ஒரு பயனராக கேள்வி வாக்கெடுப்பு நடத்தியிருந்தார் எலான்.
அதற்கு பலரும் பல விதமான கருத்துகளை தெரிவிக்க, “ட்விட்டரில் பொது கருத்தை தெரிவிக்க என்ன செய்ய வேண்டும்? என்ன மாற்றம் கொண்டு வர வேண்டும்?” என Poll நடத்திய பதிவை பகிர்ந்து கேள்வி எழுப்பினார் மஸ்க். அவரிடம், WSBChairman என்ற பயனர், “ட்விட்டரை விலைக்கு வாங்கி அதன் லோகோவை Doge-யாக மாற்றுங்கள்” என பதிவிட, அதற்கு மஸ்க் “அது கொஞ்சம் கடினம்தான்” என பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்துதான் கடந்த ஆண்டு பலகட்ட இழுபறிகளுக்கு பிறகு 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார் மஸ்க். இந்த நிலையில் நேற்று (ஏப்.,03) செயற்கை நுண்ணறிவு மாற்றம் என்பதை குறிக்கும் விதமாக MetamorphosisAI என கேப்ஷனிட்டு வண்ணத்துப்பூச்சி வடிவில் கம்பளிப்பூச்சி இருக்கும் மீமை பகிர்ந்திருந்தார்.
அடுத்ததாக ஏப்ரல் 4ம் தேதியான இன்று ட்விட்டரின் லோகோவாக இருந்த குருவிக்கு பதிலாக சீம்ஸ் நாயை மாற்றி, அதே மீம் டெம்ப்ளேட்டில் பகிர்ந்துள்ளார் எலான் மஸ்க்.
அத்துடன் கடந்த ஆண்டு மார்ச் 26ல் இட்ட பதிவை ஸ்க்ரீன்ஷாட்டாக பகிர்ந்து, கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டதாகவும் எலான் மஸ்க் ட்விட்டியிருக்கிறார்.
இதனையடுத்து ட்விட்டரில் பயனர்கள் பலரும் எலான் மஸ்கை நக்கலடித்து பதிவிட்டு வருகிறார்கள். அதில் சிலர், “Dogecoin-ன் அடையாளமாக இருக்கும் Doge-ஐ ட்விட்டரின் லோகோவாக மாற்றியதால் அந்த Dogecoin க்ரிப்டோ கரன்சியின் ஷேர் மார்க்கெட் மதிப்பு 4 பில்லியன் டாலராக உயரப்போகிறது” என்றும், “44 பில்லியன் டாலர் கொடுத்து நாய் படத்தை மாற்றதான் ட்விட்டரை எலான் வாங்கியிருக்கிறார்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சொன்னதை செய்வார் மஸ்க் என்று அவரது விசிறிகள் ஆதரவும் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் ட்விட்டர் பயனர்கள் பலரும் ‘அடுத்து என்ன ஆகப்போகுதோ’ என்ற மனநிலையிலேயே இருப்பதாக தெரிகிறது!