திருவாதிரை நட்சத்திரம் PT
டெக்

’சூப்பர் நோவா’ இதைபற்றி தெரியுமா? திருவாதிரை விண்மீன் சூப்பர் நோவாவாக மாறிவிட்டதா?

Jayashree A

சூப்பர் நோவா - இதைப்பற்றி தெரியுமா? சமீபத்தில் திருவாதிரை நட்சத்திரம் என்று சொல்லப்படும் Betelgeuse என்ற விண்மீன் சூப்பர் நோவாவாக மாற இருப்பதாக விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர். இந்த நேரத்தில், சூப்பர் நோவா குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

விண்வெளியில் இருக்கும் விண்மீன்கள் தனது ஆயுட்காலத்தை நிறைவு செய்த பின் தனது எடை தாங்காமல் தானாகவே வெடிக்கும். இத்தகைய நிகழ்வைதான் சூப்பர் நோவா என்கின்றனர். இதில் எல்லா நட்சத்திரங்களும் தங்களின் ஆயுட்காலம் முடிந்ததும் வெடிக்காது. அதில் ஒருவகை விண்மீன்கள்தான் வெடிக்கும்.

இப்படி வெடிக்கும் - வெடிக்காத அனைத்து விண்மீன்களும் நெபுலாவிலிருந்து (தூசு, வாயுக்கூட்டம்) பிறக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இவ்வாறு உருவாகின்ற விண்மீன்கள் average star, massive star என்று இரு பிரிவை கொண்டது.

Average star - இது தன் வாழ்நாள் முடிவில் சுருங்கி வெள்ளை குள்ளனாக மாறும். நமது சூரியன் இந்த வகையை சார்ந்த ஒரு விண்மீன்தான்.

Massive star - இந்த வகை விண்மீன் தனது வாழ்நாள் இறுதியில் வெடித்து black hole ஆக மாறும் . இந்தவகை விண்மீன்களில் ஒருவகைதான் Betelgeuse என்ற திருவாதிரை நட்சத்திரம்.

இந்த திருவாதிரை நட்சத்திரம் பூமியிலிருந்து சுமார் 724 ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கிறது. இதன் ஒளி பூமியை வந்தடைய 724 ஒளி ஆண்டுகள் ஆகும். அதாவது நாம் இப்பொழுது பார்த்துக்கொண்டிருக்கும் ஒளியானது 724 ஒளி ஆண்டுகளுக்கு முன் பிரகாசித்த ஒளி. சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் ஒளியின் நேரம் வெறும் 8 நிமிடங்கள் தான்.

அமெரிக்காவின் நாசா ஹைப்பீள் ஸ்பேஸ் தொலைநோக்கி மூலம் திருவாதிரை நட்சத்திரத்தை ஆய்வு செய்தனர். இது சூரியனை விட இளமையானது என்றாலும் சூரியனைவிட அளவில் பெரிதாக உள்ளது. இது, தனது எரிபொருளை எரித்து தீர்த்த நிலையில் வெடிக்கும் தருவாயில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர்.

இது குறித்து மூத்த அறிவியல் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் அவர்களிடம் நாம் பேசினோம்.

venkateshwaran

அவர் கூறுகையில், “பூமியில் இருந்து பார்க்கும்போது மிகப் பிரகாசமாகத் தெரியும் விண்மீன்களைப் பட்டியலிடும்போது, மிகப் பிரகாசமாக முதலிடத்தில் இருப்பது சிரியஸ் என்ற விண்மீன். இந்தப் பட்டியலில் 10வது இடத்தில் இருந்து வந்தது திருவாதிரை. ஆனால், சுமார் ஓராண்டாகவே இந்த பிரகாசம் மங்கத் தொடங்கி இப்போது 24 வது இடத்துக்கு சென்றுள்ளது இந்த விண்மீன். இதற்கு காரணம் இதிலிருந்து வெளிப்பட்ட சோலார் விண்ட் வாயுனானது வெளியேறி இதன் வெளிச்சத்தை தடுத்தது. அதனால்தான் இதன் பிரகாசத்தில் மாற்றம் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறினர்.

இருந்தாலும், பூமியில் இருந்து திருவாதிரை எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது பற்றி பல்வேறு முரண்பட்ட கருத்துகள் இருந்ததுண்டு. எனினும் மிகச் சமீப காலத்தில் ஹிப்பார்கஸ் விண்வெளி தொலைநோக்கி உதவியுடன் செய்யப்பட்ட கணக்கீட்டின்படி இங்கிருந்து 724 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது என்று கூறி இருக்கின்றனர்.

விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வில், அடுத்த 10 ஆண்டுகளில் எப்பொழுது வேண்டுமென்றாலும் இந்த திருவாதிரை நட்சத்திரம் வெடிக்கலாம், அல்லது ஏற்கெனவே வெடித்தும் இருக்கலாம். இந்த சூப்பர் நோவா நிகழ்சியை நாம் வெறும் கண்ணால் பூமியில் இருந்தபடி பார்க்கலாம். ஏனெனில் அத்தகைய பிரகாசமாய் அது வானில் காட்சியளிக்கும். சொல்லப்போனால் அது பகலில் கூட நம் கண்களுக்கு தெரியும். ஆனாலும் இதிலிருந்து வெளிப்படும் காமா கதிர்கள் மற்றும் பிற கதிர்களால் பூமி ஏதும் பாதிப்பிற்கு ஆளாகாது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்” என்கிறார்.