டெக்

“டிக் டாக்” செயலிக்கு கட்டுப்பாடுகள் - ஆபாச ஆடைகள், வார்த்தைகளுக்கு தடை

“டிக் டாக்” செயலிக்கு கட்டுப்பாடுகள் - ஆபாச ஆடைகள், வார்த்தைகளுக்கு தடை

webteam

“டிக் டாக்” ஆபாச பாணியில் ஆடை அணிந்து வீடியோ வெளியிடுவது, தகாத வார்த்தைகளை பேசுவது ஆகியவற்றிற்கு தடை விதித்து சீனா புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வளர்ந்து வரும் சமூக வலைத்தள நாகரிகங்களில், நாள்தோறும் புதிய வகை செயலிகள் வந்துகொண்டே இருக்கின்றன. இதில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை மக்களிடம் நிலையாக தங்கியுள்ளன. அந்த வரிசையில் தற்போது “டிக் டாக்” என்ற குறு வீடியோ செயலியும் வந்துள்ளது. இதுபோன்ற செயலிகள் மனிதர்களின் நேரங்களை வெகுவாக எடுத்துக்கொள்கின்றன. அத்துடன் அவர்களின் பிரபலமடையும் ஆர்வங்களையும் அதிகரிக்கச் செய்துள்ளன. அதேசமயம் இதுபோன்ற செயலிகளை குழந்தைகள் மற்றும் சிறுவர்களும் அதிகம் பார்க்கின்றனர். இதனால் அவற்றில் ஏதேனும் ஆபாச காட்சிகள் மற்றும் தகாத வார்த்தைகள் பகிரப்பட்டால், அது பாதிப்படைய செய்கின்றன.

இந்தியாவிலும் குறுகிய காலத்தில் அதிக பயன்பாட்டாளர்களை கொண்ட ஒரு செயலியாக மாறிவிட்டது “டிக் டாக்”. தமிழகத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் செயலி மூலம் சிலர் பிரபலமடைந்தாலும், பலர் பாதிப்பிற்குள்ளாகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு, குன்றத்தூரில் குழந்தைகளை கொன்ற அபிராமி என்ற பெண், சென்னை வியாசார்பாடியில் “டிக் டாக்” விமர்சனத்தால் தற்கொலை செய்துகொண்ட கலையரசன் என்ற இளைஞர் ஆகியோரை உதாரணமாக கூறலாம். 

இதுபோன்ற செயலிகள் சமூகச் சண்டைகள், ஆபாச உடைகள் மற்றும் ஆபாச பேச்சுக்கள் ஆகியவை முகம் சுளிக்க வைப்பவையாக உள்ளன. இவற்றையெல்லாம் தடுக்க வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும் என்பது மனநல மருத்துவர்களின் அறிவுரையாகவும் இருக்கிறது. இந்நிலையில் “டிக் டாக்” உள்ளிட்ட குறு வீடியோ செயலிகளுக்கு 100 கட்டுப்பாடுகளை விதித்து சீனா ஒழுங்கு நடைமுறை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஆபாச உடைகளை அணிவது, ஆபாச பேச்சுக்களை பேசுவது, மத அல்லது சமூக வெறியை தூண்டுவது, பணத்தை வணங்குவது, கம்யூனிஸ்ட் உடைகளை அணிந்துகொண்டு வீடியோ வெளியிடுவது, தைவான் சுதந்திரம் தொடர்பாக கோஷமிடுவது உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடுகளை பின்பற்ற அதிக வேலையாட்கள் தேவைப்படுவார்கள் என்பதால் “டிக் டாக்” நிறுவனத்திற்கு இந்த விதிமுறை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் மட்டும் 150 மில்லியன் “டிக் டாக்” பயன்பாட்டாளர்களர்கள் உள்ளனர். அதேசமயம் உலகில் அதிக பயன்பாட்டாளர்களைக் கொண்ட “ஐக்யூயி” என்ற வீடியோ செயலி இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. இது ஒரு சீன செயலி ஆகும். புதிய நடைமுறைகளை பின்பற்றாத செயலிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சீன பரிசீலித்து வருகிறது. இதுபோன்ற கட்டுப்பாடுகளை இந்தியாவும் விதிக்க வேண்டும் என தொழில்நுட்ப ஆர்வலர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.